search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1979-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் ஆர்டர்லி முறையே இல்லை - ஐகோர்ட்டில், டி.ஜி.பி. பதில் மனு தாக்கல்
    X

    1979-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் ஆர்டர்லி முறையே இல்லை - ஐகோர்ட்டில், டி.ஜி.பி. பதில் மனு தாக்கல்

    தமிழகத்தில் ஆர்டர்லி முறையே இல்லை என்றும், 1979-ம் ஆண்டு இந்த முறையை ஒழித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்த பின்னர் எந்த ஒரு போலீஸ் அதிகாரிகள் வீட்டிலும் ஆர்டர்லியாக யாரையும் நியமிக்கவில்லை என்றும் ஐகோர்ட்டில் தமிழக டி.ஜி.பி. சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘போலீசாருக்கு பணி சுமை அதிகம் உள்ளதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். பலர் தற்கொலை செய்கின்றனர். வேலையை விட்டு ஓடிவிடுகின்றனர். எனவே, அவர்களது பணி நேரத்தை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ என்று 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

    ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை போலீஸ்காரர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்?, எத்தனை பேர் வேலையை உதறிச்சென்றனர்?, உயர் அதிகாரி வீடுகளில் எத்தனை பேர் ஆர்டர்லியாக வேலை செய்கின்றனர்?.

    1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறையை ஒழித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்த பின்னரும், அந்த முறை அமலில் உள்ளதா? என்பது உள்பட பல கேள்விகளை கடந்த 19-ந்தேதி நீதிபதி கேட்டிருந்தார்.



    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக டி.ஜி.பி. சார்பில், உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் (வயது 51) பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    1979-ம் ஆண்டு ஆர்டர்லி முறையை ஒழித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்பின்னர் தமிழகத்தில் ஆர்டர்லி முறையே இல்லை. இந்த முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது பணியில் இருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீட்டிலும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் வீட்டிலும் ஆர்டர்லி போலீசார் யாரும் இல்லை. ஆர்டர்லியாக யாரையும் நியமிக்கவும் இல்லை. அதேநேரம், அதிகாரிகளின் வீட்டில் பணியின் (ஆன் டியூட்டி) அடிப்படையில் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    போலீஸ் அதிகாரிகள் வீட்டில் பணியாற்ற, உதவியாளர்களை நியமிப்பது கொள்வது தொடர்பாக தமிழக உள்துறை கடந்த 2012-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், 8 ஆயிரத்து 158 போலீசார், வேலையை உதறிச் சென்றுள்ளனர்.

    இதே காலக்கட்டத்தில் 520 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 296 பேர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துள்ளனர். இந்த 10 ஆண்டுகளில் பணியில் இருக்கும்போது, 3 ஆயிரத்து 32 பேர் மரணமடைந்துள்ளனர்.



    தமிழக காவல்துறையில், ஒரு டி.ஜி.பி. பதவி, 3 கூடுதல் டி.ஜி.பி. பதவிகள், 7 ஐ.ஜி. பதவிகள், 8 டி.ஐ.ஜி. பதவிகள், 8 போலீஸ் சூப்பிரண்டு பதவிகள், 31 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பதவிகள், 34 துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிகள் என்று மொத்தம் 22 ஆயிரத்து 630 இடங்கள் காலியாக உள்ளன.

    தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.க்கள் முதல் காவலர் வரை, கடந்த ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி மொத்தம், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 239 பேர் உள்ளனர்.

    மாநிலத்தின் மொத்த ஜனத்தொகையின் அடிப்படையில் போலீசாரின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். கடந்த 2017-ம் ஆண்டு, தமிழக ஜனத்தொகை 7 கோடியே 91 லட்சத்து 60 ஆயிரத்து 42 என்றும், இதன் அடிப்படையில், காவல்துறையின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் அறிக்கை கூறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழகத்தில் ஆர்டர்லி முறையே இல்லை. எந்த ஒரு போலீஸ் அதிகாரிகள் வீட்டிலும், ஆர்டர்லிகள் இல்லை என்று டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்வார் என்று எனக்கு நன்கு தெரியும்’ என்று கருத்து தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை விட, அதிக விவரங்கள் எங்களிடம் உள்ளது. பல விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு அரசு வாகனங்கள் எத்தனை பயன்படுத்தப்படுகிறது?, ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீட்டில் எத்தனை போலீசார் பணியாற்றுகின்றனர்?, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வீடுகளில் ஆர்டர்லி போலீசார் பணியாற்றுகின்றனரா?, போலீசாருக்கு பணி நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு ஏன் உத்தரவிடக்கூடாது?

    இதர பணிகள் என்ற பெயரில் அதிகாரிகள் வீட்டில் போலீசாரை பணி அமர்த்துவது, ஆர்டர்லி முறையை ஒழித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரானது தானே? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு உதவி ஐ.ஜி. பதில் அளிக்கவில்லை.

    எனவே, உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #TNPolice #Tamilnews #Police
    Next Story
    ×