search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர்களை நியமிக்க லஞ்சம் - முன்னாள் துணைவேந்தர்களை கைது செய்ய நடவடிக்கை
    X

    பேராசிரியர்களை நியமிக்க லஞ்சம் - முன்னாள் துணைவேந்தர்களை கைது செய்ய நடவடிக்கை

    பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதால் முன்னாள் துணைவேந்தர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங்களில் முறைகேடு நடந்திருப்பது தொடர்ச்சியாக வெளிவர தொடங்கியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சென்னையிலும் 2 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான ராஜாராம், தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான வணங்காமுடி ஆகிய இருவர் மீதும் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி 2 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 120பி (கூட்டுசதி), 420 (மோசடி), 467 (பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுதல்), 468 (திட்டமிட்டே முறைகேடு செய்தல்) உள்ளிட்ட சட்டப்பிரிவுகள் பாய்ந்துள்ளன. ராஜாராம், வணங்காமுடி இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் துணை வேந்தராக ராஜாராம் பணி புரிந்துள்ளார். அப்போது பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆட்களை நியமித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழக ஊழியர்கள் 5 பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இதே போல தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வணங்காமுடி மீதும் முறைகேடு புகார் கூறப்பட்டுள்ளது. சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இட ஒதுக்கீட்டில் வணங்காமுடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதற்காக அவரும் லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வணங்காமுடி மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இருவருக்கும் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். ராஜா ராமுக்கு சொந்தமான சென்னை, தேனி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியது. முக்கிய ஆவணங்களும் கைற்றப்பட்டுள்ளன.

    வணங்காமுடிக்கு சொந்தமான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ. 97 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கி உள்ளது.

    துணைவேந்தர் ராஜாராமின் தம்பி வெங்கடேஷ் தேனி கே.ஆர்.ஆர்.நகரில் வசித்து வருகிறார். பிரபல பஸ் நிறுவன உரிமையாளரான இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். போலீஸ் டி.எஸ்.பி சத்திய சீலன் தலைமையிலான குழுவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

    இதேபோல் தேனி- பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் கண்மருத்துவமனை மற்றும் ராஜாராமின் உறவினர் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிலும் சோதனை நடத்தப்பட்டது.

    லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள இருவர் மீதும் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ராஜாராம், வணங்காமுடி இருவரது செல்போன்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    போலீஸ் நடவடிக்கை இறுகி உள்ளதால் இருவரும் நாளை கோர்ட்டில் முன் ஜாமீன் பெறுவதற்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×