search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்
    X

    புதுவை சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்

    புதுச்சேரியில் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட் சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறும். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் புதுவை சட்டசபையில் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 3 அல்லது 4 மாத செலவீனங்களுக்கு அனுமதி (இடைக்கால பட்ஜெட்) மட்டும் பெறப்பட்டு வந்தது.

    அதுபோல் இந்த ஆண்டும் நாளை (திங்கட்கிழமை) கூடும் சட்டசபையில் அரசின் 3 மாத செலவீனங்களுக்கு அனுமதி (இடைக்கால பட்ஜெட்) பெறப்படுகிறது. இதற்காக சட்டசபை நாளை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கிரண்பேடி சட்டசபையில் உரையாற்றுகிறார்.

    இதற்காக நாளை காலை 9.30 மணிக்கு கவர்னர் கிரண்பேடி கார் மூலம் சட்டசபை வளாகத்துக்கு வருகிறார். அங்கு அவரை சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

    மேலும் கவர்னருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சட்டசபை மைய மண்டபத்துக்கு கவர்னர் கிரண்பேடி வருகிறார். அங்கு சபாநாயகர் இருக்கையில் அமருகிறார்.



    இதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சி தொடங்குகிறது. கவர்னர் கிரண்பேடி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அவரது உரையை சபாநாயகர் வைத்திலிங்கம் தமிழில் வாசிக்கிறார். இதையடுத்து கவர்னர் கிரண்பேடி சட்டசபையில் இருந்து விடை பெற்று செல்கிறார்.

    தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர் நாராயணசாமி 3 மாத அரசின் செலவீனங்களுக்கு (இடைக்கால பட்ஜெட்) அனுமதி பெறுகிறார். இத்துடன் சபை நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

    இதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 2 நாட்கள் விவாதம் நடக்கிறது.

    நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரின் போது, இலவச அரிசி வழங்காதது, நலத்திட்டங்கள் முடக்கம், நிர்வாகத்தில் கவர்னரின் தலையீடு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×