search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றுகிறது- பொன்.ராதாகிருஷ்ணன்

    காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றுவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
    ஆலந்தூர்:

    மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூட என்னிடம் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமின்றி தமிழகத்திற்கு முறைப்படி கர்நாடகம் தரவேண்டிய தண்ணீர் உள்பட எல்லா நடவடிக்கைகளிலும் மத்திய அரசு முழுக்கவனம் செலுத்தும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதில் பலர் அரசியல் நடத்துகின்றனர். அந்த அரசியலுக்குள் போக நான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் எனது வேண்டுகோள் என்னவென்றால் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை அழைத்துக் கொண்டு கர்நாடகவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தட்டும்.



    எங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை ஏன் தர மறுக்கிறீர்கள்? முறைப்படி வாரியம் அமைக்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? என கேட்கவேண்டும். அதை ஏன் செய்யவில்லை? இதை செய்ய என்ன தயக்கம் உள்ளது. தமிழர்களுக்கு துரோகம் செய்ய தி.மு.க., காங்கிரஸ் இணைந்து சதி செய்கின்றன.

    மாநிலங்களவையில் உள்ள தங்களின் 4 எம்.பி.க்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தி.மு.க.வே விரும்புகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய தயார் என்று தி.மு.க. கூறியது. அப்படி செய்திருக்க வேண்டியது தானே. ஏன் ராஜினாமா செய்யவில்லை?

    ஆனால் தற்போது எல்லா எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யவேண்டும் என்கின்றனர். இவை எல்லாம் தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதை பாரதிய ஜனதா செய்யும்.

    தமிழகத்திற்கு மத்திய அரசு எந்தெந்த துறைகளில் நிதி பாக்கி வைத்துள்ளது? என்பதை கூறினால் அவற்றை பெற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அதை என்னுடைய பார்வைக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    ‘பாரதிய ஜனதாவினர் மீது கை வைத்தால் கையிருக்காது’ என்று தமிழிசை கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அவர் (தமிழிசை) கையிருக்காது என்று சொன்னது காங்கிரஸ் கட்சியைத்தான், நீங்கள் தப்பாக புரிந்து கொள்ளவேண்டாம்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×