search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுயநலம் இருந்தால் ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை - சுதாகர் அறிக்கை
    X

    சுயநலம் இருந்தால் ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை - சுதாகர் அறிக்கை

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர். அரவிந்த், மாவட்ட செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு மற்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், திண்டுக்கல் மாவட்ட, நகர, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களாக தொடர்வோம் என்றும் கூறியுள்ளனர்.

    இதுபற்றி  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று வெளியிட்ட அறிக்கையில், சுயநலம் இருந்தால் ரஜினி மக்கள் மன்றத்தில் இடம் இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    “ரஜினி மக்கள் மன்றம் தூய்மையான அரசியலை முன்னிறுத்தி பொதுமக்களுக்கு சேவை புரிவதற்காக தொடங்கப்பட்டுள்ள அமைப்பு. இதில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் மன்றத்தின் குறிக்கோளுக்கு ஏற்ப செயல்படாதபட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மன்றத்தை சரியான பாதையில் நடத்திச்செல்வது தலைமையின் கடமை.

    தம்புராஜ் செய்தது தலைமைக்கு விரோதமானது என்றாலும் அவரை தற்காலிகமாக நீக்கவும், தம்புராஜ் தவறை உணரும் வரை வேறு யாரையும் அந்த பொறுப்பிற்கு நியமிக்கக் கூடாது என்றும் தலைவர் அறிவுறுத்தினார். ஆனால், தம்புராஜ் தவறை உணராமல், நிர்வாகிகளை தூண்டிவிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தி அவதூறு பரப்பி மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வது ஏற்புடைய செயல் அல்ல.

    பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை. எனவே தலைவரால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட மன்ற நிர்வாகிகள் அனைவரும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நியாயம் செய்யும்வகையில் செயல்பட வேண்டும் என்று தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது ஆணைக்கும் விருப்பத்திற்கும் இணங்க நிர்வாகிகள் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என சுதாகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram #tamilnews
    Next Story
    ×