search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்- தினகரன்
    X

    ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்- தினகரன்

    ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்ச் 30-ந்தேதி நடராஜனின் படத்திறப்பு விழா நடைபெறுகிறது. இதற்கு முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. கலந்து கொள்வதற்கான தேதி, நேரம் இருக்கிறதா என்பதை பொறுத்து யாரெல்லாம் வருவார்கள் என்று இரண்டு நாட்களில் முடிவு செய்து விட்டு சொல்கிறேன்.

    தமிழரசி மண்டபத்தில் காலை 10 மணிக்கு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்துள்ளோம்.

    சிலீப்பர் செல் என்ற வார்த்தை உங்களுக்கெல்லாம் ரொம்ப பிடித்திருக்கிறது என்பதால் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் அவர்கள் வெளிப்படுவார்கள்.

    ஓட்டெடுப்பு நடைபெறும் போது இந்த அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் வாக்களிப்பார்கள். அதுவரை யார் அவர்கள் என்று தெரியாத மாதிரி தான் செயல்படுவார்கள்.

    புரட்சித் தலைவரும், அம்மாவும் திறமையும், வலிமையும் மிக்க தலைவர்கள். இப்பொழுது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். பதவியில் இருந்தாலும், தலைவர்களாக அவர்களை சொல்ல முடியாது.

    இரட்டை இலை, கட்சி பெயர், வாக்குக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தும் ஆர்.கே.நகரில் மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். உண்மையான அ.தி.மு.க. என்பது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தான். வருங்காலத்தில் கட்சியையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் செயலாளராக பன்னீர்செல்வம் என்பவர் இருந்தார். அவருக்கு பதிலாக தற்போது கோகிலா என்பவரை நியமித்துள்ளார்கள். அவருடைய கணவர் பாபு பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞராக இருக்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி போடும் போது அவர்களை வாழ்த்தி விளம்பர பலகைகள் வைத்தவர் தான் அவர்.

    பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக பாபு இருக்கும்போது, அவருடைய மனைவியை விசாரணை ஆணைய பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். விசாரணை ஆணையம் வேண்டும் என்று கோரியவர் பன்னீர்செல்வம். அவருடைய ஆதரவாளரை விசாரணை ஆணையத்தில் சேர்த்தால் இந்த விசாரணை ஆணையம் எப்படி சரியாக செயல்பட முடியும்.

    பொதுச்செயலாளர் சார்பாக விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறு என்று சொல்லிவிட்டு, ஊடகத்தை சார்ந்தவர்களை கூப்பிட்டு அப்படியெல்லாம் விசாரணை ஆணையத்தில் அவர்கள் கூறவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

    விசாரணை ஆணையம் போகிற போக்கு இப்படித் தான் இருக்கிறது. இது நியாயமான விசாரணை ஆணையமாக செயல்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய நம்பிக்கை.


    எங்களுக்கு மடியில் கனமில்லை என்பதால் இந்த ஆணையம் மூலம் உண்மை வெளிப்படும் என்று நினைத்தோம். வெற்றிவேல் டிசம்பர் 19-ந்தேதி அன்று வீடியோவை வெளியிடும் போது, அதுவரை பொய் கூறிக் கொண்டிருந்த பன்னீர் செல்வமும், பழனிசாமியும் பதறிப்போய் தேர்தல் அதிகாரியை வைத்து வழக்கு போட வைத்தார்கள். கைது செய்ய முடியாது என்பதால் விசாரணை ஆணையம் பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தார்கள்.

    அப்பொழுதே உங்களிடம் விசாரணை ஆணையம் வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பி பென்டிரைவ் கொடுங்கள் என்று கூறியிருக்க வேண்டும் என்று கூறினேன். அதைவிட்டு யாரோ ஒருவர் கொடுத்த புகாரை வைத்துக் கொண்டு வீடியோ போலியானது என்று சொல்லி கைது செய்வதையே நோக்கமாக கொண்டு பழனிசாமியின் ஆசையை நிறைவேற்ற இந்த ஆணையம் செயல்படுகிறதா? என்று கூறினேன்.

    அதன்பிறகு வெற்றிவேல் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கியது அனைவருக்கும் தெரியும். விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் ஓய்வு பெற்றதும், வேறுயாருமே இல்லாதது போல பன்னீர் செல்வத்தின் கைத்தடியாக உள்ள பாபுவின் மனைவியை இணைச் செயலாளராக அமர்த்தியிருப்பது எவ்வகையில் நியாயமாக இருக்க முடியும்.

    விசாரணை ஆணையம் என்கிற பெயரில் சதித்திட்டம் ஏதோ நடக்கிறது என்று எங்கள் கட்சியினர் மட்டுமல்ல, பொதுமக்களும், பொதுவான பலரும் கூறுகிறார்கள். இதெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

    சித்தப்பா நடராஜன் சடங்குகள் முடிந்தவுடன் சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம். வெளிநாட்டில் இருந்தெல்லாம் மருத்துவர்கள் வந்துள்ளார்கள். ஒருநபர் ஆணையம் சரிவராது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தான் ஏற்கனவே நாங்கள் கூறிவருகிறோம்.

    விசாரணை ஆணையத்தின் மூலம் கண்துடைப்புக்காக ஏதாவது எழுதி முடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோன்றெல்லாம் நடக்காது. மக்கள் அதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நியாயமான திசையில் விசாரணை ஆணையம் சென்று கொண்டிருக்கிறதா என்பது இறைவனுக்கே வெளிச்சம். சி.பி.ஐ. விசாரணை அமைக்க பழனிசாமி தான் சொல்ல வேண்டும். விசாரணை ஆணையத்தின் நோக்கம் நடுநிலையாக இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று சொல்கிறேன். பொறுமையாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×