search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டை அருகே விவசாயிகள் பணத்தை மோசடி செய்த கூட்டுறவு வங்கி
    X

    நிலக்கோட்டை அருகே விவசாயிகள் பணத்தை மோசடி செய்த கூட்டுறவு வங்கி

    நிலக்கோட்டை அருகே விவசாயிகள் பணத்தை கூட்டுறவு வங்கி மோசடி செய்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் விசாயிகள் நலனுக்காக மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, பழனி, வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால் நிலக்கோட்டை பகுதியில் சுமார் 50 பேருக்கு மட்டுமே கார்டு மற்றும் பின் நம்பர் வந்துள்ளது. மற்ற விவசாயிகள் வங்கி அதிகாரிகளிடம் தங்களுக்கு ஏ.டி.எம்.கார்டு கேட்க சென்றால் இன்னும் வரவில்லை என கூறி அனுப்பி விடுகின்றனர். ஆனால் அனைவருக்கும் பின் நம்பர் வந்து விட்டது.

    தற்போது அப்பகுதி விவசாயிகளின் செல்போன்களுக்கு தங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.36 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது. ஏ.டி.எம். பயன்பாட்டிற்காக இந்த பணம் பிடிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை தங்களுக்கு ஏ.டி.எம். கார்டே வராத நிலையில் பயன்பாட்டு தொகை பிடிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டபோது இன்னும் சில நாட்களில் ஏ.டி.எம்.கார்டு வந்து விடும் என கூறி உள்ளனர். ஆனால் பணம் பிடித்தது குறித்து முறையான பதில் அளிக்க வில்லை. ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    மழை இல்லாததால் நஷ்டம், போதிய விலையின்மை போன்றவற்றால் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுபோன்று பணத்தை பிடிப்பது அவர்களுக்கு மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே அதிகாரிகள் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அவர்களது வங்கி கணக்கில் மீண்டும் வரவு வைக்க வேண்டும். ஏ.டி.எம். கார்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×