search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் கைது
    X

    சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- வாலிபர் கைது

    சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    திருச்சி:

    திருச்சியில் உள்ள அவசர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறி விட்டு, பெயர் எதுவும் கூறாமல் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

    திருச்சி விமான நிலைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மூலம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை மற்றும் புறப்படும் இடம், விமான ஓடுபாதை உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சோதனை நடைபெற்றது.

    இதே போல் சென்னை, மதுரை விமான நிலையங்களிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. யாரோ வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.

    வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை நடத்திய காட்சி.


    இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் பகுதியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் லால்குடி போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்த சுப்பிரமணி (வயது 30) என்று தெரிய வந்தது.

    இதையடுத்து லால்குடி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது சுப்பிரமணி குடிபோதையில் இருந்தார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் மது போதையில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சாப்ட்வேர் என்ஜினீயர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    Next Story
    ×