search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்பல்லோவில் சி.சி.டி.வி கேமராக்களை நாங்கள் அணைக்க சொல்லவில்லை- தினகரன்
    X

    அப்பல்லோவில் சி.சி.டி.வி கேமராக்களை நாங்கள் அணைக்க சொல்லவில்லை- தினகரன்

    ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை நாங்கள் அணைக்க சொல்லவில்லை என டி.டி.வி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
    தஞ்சாவூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவது நாடகம் தான். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை தடுப்பதற்காக பா.ஜனதாவுக்கு ஆதரவாகத்தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதுதான் உண்மை.

    ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்த்துக் கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை ஏன் நியமனம் செய்தார்கள்? திருப்பதியில் விழுவதை போல் அவர் காலில் எதற்காக விழுந்தார்கள்? அமைச்சர் ஜெயக்குமாரும் சசிகலா காலில் விழுந்தவர் தான். என்னை துணை பொதுச்செயலாளராக ஏற்று கொண்டு எனக்காக ஆர்.கே.நகர் தேர்தலில் எதற்காக பிரசாரம் செய்தார்கள்? மத்திய அரசுக்கு பயந்து எங்களை ஒதுக்கி வைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.


    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது கண்காணிப்பு கேமராவை நாங்கள் அணைத்து வைக்க சொல்லவில்லை.

    எதற்காக கேமராக்களை அணைத்து வைத்தார்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது இந்த ஆட்சி இருக்குமா? இல்லையா? என தெரியும்.

    விரைவில் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி முடிவுக்கு வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாய சங்கத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் வாக்குமூலம் என்று வெளிவந்த செய்திகள் பொய் என விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இப்படி அவசரமாக மறுப்பு தெரிவித்தது ஏன்? விசாரணை ஆணையத்தின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×