search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இன்சுலினோமா என்ற அரியவகை கட்டி அகற்றம் - டாக்டர்கள் சாதனை
    X

    அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இன்சுலினோமா என்ற அரியவகை கட்டி அகற்றம் - டாக்டர்கள் சாதனை

    சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு ‘இன்சுலினோமா’ என்ற அரியவகை கட்டியை அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜம்ஷத் பேகம் (வயது 45). இவருக்கு 4 ஆண்டுகளாக அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று குறைந்து மயக்கம், வலிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இதை அருகில் இருந்த டாக்டரிடம் காண்பித்தனர். ஆனால் அவருக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அவர் கடந்த ஜனவரி மாதம் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில், அவருக்கு கணையத்தின் தலைப்பகுதியில் அரிய வகை கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவுசெய்தனர்.

    கடந்த மாதம் 19-ந் தேதி ஜம்ஷத் பேகத்துக்கு இந்த அறுவை சிகிச்சையை கல்லீரல் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஆனந்த் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு செய்து அந்த கட்டியை அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் ஆனந்த், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    இது கணையத்தில் ஏற்பட்ட ‘இன்சுலினோமா’ என்ற அரியவகை கட்டி. இந்த வகை கட்டி 10 லட்சத்தில் 4 பேருக்கே ஏற்படக்கூடியது ஆகும். இந்த இன்சுலினோமா கட்டி கணையத்தில் இன்சுலினைச் சுரக்கும் பகுதியைப் பாதித்து வளர்கிறது. அதன் விளைவாக தான் ஜம்ஷத் பேகத்துக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து வந்துள்ளது.

    2.5 செ.மீ. அளவு உள்ள அந்தக் கட்டியை 7 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றினோம். தற்போது ஜம்ஷத் பேகம் நலமாக உள்ளார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக உள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் இந்த வகை கட்டியை அகற்றியது இதுவே முதன்முறை. தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×