search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் இன்று நடக்கிறது

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி. மு.க. அரசு பதவி ஏற்று பிப்ரவரி 16-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.

    இவ்விழாக்களில், ரூ.5 ஆயிரத்து 127.11 கோடியில் முடிவுற்ற 2 ஆயிரத்து 329 திட்டப்பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். ரூ.5 ஆயிரத்து 712.90 கோடியில் 3 ஆயிரத்து 200 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 521 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ரூ.5 ஆயிரத்து 397.52 கோடியில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 481 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதே போல் அரசு விழா மற்றும் காணொலி காட்சி மூலமாக ரூ.11 ஆயிரத்து 827.34 கோடியில் 35 ஆயிரத்து 819 முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார். ரூ.8 ஆயிரத்து 837.29 கோடியில் 6 ஆயிரத்து 411 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்ட கடந்த ஓராண்டில் மட்டும் 5,208 கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி உள்ளது.

    இதையொட்டி அரசு சார்பில் ஓராண்டு சாதனை விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கிறது. விழாவுக்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். சாதனை மலர், சாதனை விளக்க படங்கள், குறும் பாடல் கள், புகைப்பட தொகுப்பு, முதல்-அமைச்சரின் முந்தைய உரைகள் மற்றும் பொன் மொழிகள் தொகுப்பை வெளியிட்டு, எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்கிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.வெங்கடேசன் நன்றி கூறுகிறார்.

    விழாவில் அமைச்சர்கள், சட்டசபை துணைத்தலைவர், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 
    Next Story
    ×