search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தியால்பேட்டை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம்- கவர்னரிடம் அ.தி.மு.க. கோரிக்கை
    X

    முத்தியால்பேட்டை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம்- கவர்னரிடம் அ.தி.மு.க. கோரிக்கை

    முத்தியால் பேட்டையில் பல ஆண்டுகளாக குடி நீரில் உப்பு நீர், கழிவு நீர் கலந்து வருவதால் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கோரி கவர்னரிடம் அதிமுகவினர் மனு அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாநில செயலாளர் செந்தில் குமரன் மற்றும் நிர்வாகிகள் எம்.ஆர். சரவணன், லூர்து, முத்துராமன், ஜெ.சரவணன் ஆகியோர் கவர்னர் கிரண் பேடியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்தியால் பேட்டையில் பல ஆண்டுகளாக குடி நீரில் உப்பு நீர், கழிவு நீர் கலந்து வருவது வாடிக்கையாக உள்ளது. பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடும் போது, சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்பட்டாலும், நிரந்தரமாக தீர்வு ஏற்படுத்த அரசு முயற்சி செய்ய வில்லை.

    திருவள்ளுவர் நகர், சோலை நகர் வார்டு, பெருமாள் பேட்டை 3-வது வார்டு, தெபேசன் பேட்டை வார்டு, 2-வது வார்டு போன்ற பகுதிகளில் குடிநீருடன் உப்பு நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வருவதுடன் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்து இரும்பு துகள்கள் கலந்து வருகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.

    சுத்தமான குடிநீருக்காக பெண்கள் அருகில் உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பத்துக்கு சென்று வரும் சூழ்நிலை உள்ளது.

    எனவே, சோலை நகர், காட்டாமணிக்குப்பம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் கிரண் பேடி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    Next Story
    ×