search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் பெரும் முதலாளிகள் மோசடி செய்ய யார் காரணம்?
    X

    வங்கிகளில் பெரும் முதலாளிகள் மோசடி செய்ய யார் காரணம்?

    வங்கிகளில் வாரக்கடனை வசூலிக்காமல் இருப்பது மற்றும் பெரும் முதலாளிகள் மோசடி செய்ய காரணமாக இருப்பது யார்? என்று அகில இந்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்கள் தலைமறைவாகி விட்டனர் இதனால் பொதுமக்கள் சேமிப்பு கேள்விக் குறியாகும் நிலை உருவாகி உள்ளது.

    அரசு மற்றும் தனியார் வங்கிகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளதால் வங்கிகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சாதாரண வாடிக்கையாளரிடம் சேவை வரி என்று பல்வேறு கட்டணங்கள் விதித்து வரும் வங்கிகள் மொத்தமாக பல ஆயிரம் கோடிகளை ஒரு சில தொழில் அதிபர்களுக்கு கடன் கொடுத்து ஏமாந்துள்ளது. நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி நடப்பதற்கு யார் காரணம்? வராக்கடன் வசூலிக்கப்படாமல் இருப்பது ஏன் என்பதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையால் வங்கிகள் இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வங்கிகளின் சட்ட வழிகள் தளர்த்தப்பட்டதே பெரும் முதலாளிகள் மோசடிக்கு காரணமாகும்.

    தனி முதலாளிகளின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி என்று பிரதமர் மோடி தப்பு கணக்கு போட்டு விட்டார். தனிநபர்களும், குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்துள்ளன. அதற்கு வங்கிகளின் கடன் கொள்கை உதவியாக இருக்கிறது.

    வங்கிகளின் கொள்கைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால் பெரும் முதலாளிகள் வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றுகிறார்கள்

    இதனை கண்காணிக்க வேண்டிய இந்திய ரிசர்வ் வங்கி தனது கடமையில் இருந்து தவறி வருகிறது. அரசும் பெரும் தொழில் அதிபர்கள் வளர்ச்சி அடைவதற்கு சலுகை வழங்கி வருகிறது. இதனால் இதுபோன்ற மோசடி அதிகரித்து வருகிறது.



    ஏற்கனவே பெரும் முதலாளிகள் பெற்ற 15 லட்சம் கோடி கடன்களை திருப்பி தராமல் ஏமாற்றி வருகின்றனர். அந்த வராக்கடனை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்காமல் அவற்றை தள்ளுபடி செய்யும் முடிவை அரசு எடுத்து வருகிறது. கடன் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட கூட மத்திய அரசு தயங்குகிறது.

    இதுபோன்ற பெரும் முதலாளிகள் தேர்தல் நிதியாக உதவி செய்வதே இதற்கு காரணம். இதனால் பொதுமக்களின் சேமிப்பிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பொது மக்களிடம் வசூலிக்கப்படுகின்ற வரி இதுபோன்ற மோசடிகளை சரிகட்டவே பயன்படுகிறது.

    இப்படிப்பட்ட மோசடியால் ஏற்படும் வங்கிகளின் நஷ்டங்களை சரிகட்டுவதற்கு சாதாரண வாடிக்கையாளர்களின் சேவை கட்டணம் என்று வசூலிக்கப்படுகின்றன. இவற்றையும் ரிசர்வ் வங்கி தடுப்பது இல்லை.

    எனவே இது ஒரு கூட்டுக் கொள்ளையாக மாறிவருகிறது. இந்த கொள்கை மாற வேண்டும். என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் போராடி வருகிறது.

    இந்த கோரிக்கைகள் பொதுமக்கள் இயக்கமாக மாறும்போது வங்கிகளும் பொதுமக்களின் பணமும் பாதுகாக்கப்படும்.

    வங்கிகளில் நடைபெறும் மோசடி தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவருவதால் வங்கிகள் மீது பொது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை வெகுவாக பாதிக்கப்படுகிறது.

    அது மேலும் அதிகரிக்கும் வகையில் வங்கிகளின் நஷ்டத்தை சரிகட்ட பொது மக்கள் சேமிப்பை உபயோக படுத்தலாம் என்கிற சட்டத்தையும் பா.ஜனதா ஆட்சி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இவை அனைத்தும் மிகுந்த கவலை அளிக்கிறது.

    வங்கி சட்ட திட்டங்கள் மற்றும் பராமரிப்பு சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இத்தகைய மோசடிகளை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×