search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ஜி.பி. அலுவலகத்தில் காவலர்கள் தீக்குளிக்க முயற்சி - தேனி எஸ்.பி விளக்கம்
    X

    டி.ஜி.பி. அலுவலகத்தில் காவலர்கள் தீக்குளிக்க முயற்சி - தேனி எஸ்.பி விளக்கம்

    சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 ஆயுதப்படை போலீசார் தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில், தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். #TNPolice
    தேனி:

    சென்னை கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தின் வெளியே இன்று மாலை தேனி மாவட்ட ஆயுதப்படையில் காவலர்களாக உள்ள ரகு, கணேஷ் ஆகியோர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றனர். 

    இதனை கண்ட அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். தேனியில் காவல் உயரதிகாரிகள் சாதி ரீதியாக பணி ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், எங்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், இடமாற்றம் செய்கின்றனர். சாதிரீதியாக தங்களை ராமநாதபுரத்திற்கு இடமாற்றம் செய்கின்றனர் என அடுக்கடுக்காக புகார் கூறினர்.



    இந்நிலையில், காவலர்கள் தற்கொலை முயற்சி தொடர்பாக தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறைக் கைதிகளிடம் கஞ்சா சிக்கியது தொடர்பாக சிறைக்கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவலர் கணேஷ் ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்லாமல் சீருடையுடன் ரேக்ளா ரேஸில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும், துறை உத்தரவை மதிக்காமல் இருந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அவர்கள் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து, அவர்கள் என்னிடம் வந்து எங்களை நீங்கள் பணியிட மாற்றம் செய்ய கூடாது என கூறினர். காவல்துறையிருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    ரகு, கணேஷ் உள்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற ஜாதியினரும் இருக்கும் நிலையில், அவர்களை ஜாதி ரீதியாக பிரிப்பதாக கூறப்படும் புகார் பொய்யானது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையில் அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் உள்ளது. குறிப்பிட்ட ஜாதியினர் மீது நடவடிக்கை என கூறுவதை ஏற்க முடியாது. 

    இவ்வாறு அவர் கூறினார். #TNPolice #PoliceSuicide
    Next Story
    ×