search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
    X

    10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

    திருவண்ணாமலை மாவட்ட கடைக்காரர்கள் யாராவது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    இந்தியா முழுவதும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும். இவற்றை வாங்க மறுப்பவர்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து வருகிறது. இருப்பினும், திருவண்ணாமலை மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயங்கள் தொடர்பான அச்சம் நிலவி வருகிறது.

    அரசு மற்றும் தனியார் பஸ்களில் கண்டக்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் அனைத்து வங்கிகளிலும் 10 ரூபாய் நாணயங்கள் மூட்டை, மூட்டையாக குவிந்துள்ளன.

    இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என்ற விழிப்புணர்வை திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள், வணிகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், இந்தியன் வங்கி தலைமையிலான அனைத்து வங்கிகளும் இணைந்து 3 நாள் சிறப்பு நாணய மாற்று முகாமை நடத்துகின்றன.

    முகாமின் தொடக்க விழா திருவண்ணாமலை, டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. விழாவுக்கு இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பு நாணய மாற்று முகாமை தொடக்கி வைத்தார்.

    தொடர்ந்து, வியாபாரிகள், பொதுமக்களுக்கு 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும், கலெக்டர் முன்னிலையில் இந்தியன் வங்கி அதிகாரி கோவிந்தராஜன் ரூ.10 நாணயங்களை கொடுத்து காலணி வாங்கி, வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது: 10 ரூபாய் நாணயங்களில் சில மாற்றங்கள் இருப்பினும் அனைத்துமே சட்டப்படி செல்லும். இவை அனைத்து வித பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.

    10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி தடை செய்யவில்லை. எனவே, திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள், பஸ்களின் கண்டக்டர்கள் என அனைத்துத் தரப்பினரும் 10 ரூபாய் நாணயங்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் வாங்கி பயன்படுத்தலாம். கடைக்காரர்கள் யாராவது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #Tamilnews
    Next Story
    ×