search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேபிள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது - உரிமையாளர்களுக்கு அரசு உத்தரவு
    X

    கேபிள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது - உரிமையாளர்களுக்கு அரசு உத்தரவு

    கேபிள் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று உரிமையாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கேபிள் டி.வி. உரிமையாளர்கள் நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். புதுவை, உழவர்கரை ஆகிய நகராட்சிகளுக்கும், 5 கொம்யூன் பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சுமார் ரூ.1.75 கோடி வரி பாக்கி வைத்துள்ளனர்.

    அதோடு கேபிள் டி.வி. இணைப்புகளின் எண்ணிக்கையை புதுவையில் 8 ஆயிரம் என்றும், உழவர்கரை நகராட்சியில் 9 ஆயிரம் என்றும் கணக்கு காட்டியுள்ளனர். உண்மையான எண்ணிக்கையிலான இணைப்புகளுக்கு வரி வசூலிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் கேபிள் டி.வி. தொடர்பாக கவர்னருக்கும் பல்வேறு புகார்கள் சென்றது. மின்சார கம்பங்களில் கேபிள் டி.வி. வயர்களை கொண்டுசெல்வது குறித்தும் புகார் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார், அரசு செயலாளர்கள் அன்பரசு, மணிகண்டன் மற்றும் கேபிள் டி.வி. உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கேபிள் டி.வி. உண்மையான எண்ணிக்கை இணைப்புகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பழைய வரி பாக்கியான ரூ.1.75 கோடியை செலுத்த வேண்டும். மின்சார கம்பங்களில் செல்லும் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    கேபிள் டி.வி. உரிமையாளர்கள் தரப்பில் கேபிள் டி.வி. கட்டணத்த உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்றும் பாக்கியை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

    கட்டணத்தை உயர்த்த அனுமதித்தால் வரியை செலுத்த ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர். ஆனால், அரசு தரப்பில் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும் செட்-டாப் பாக்சை அரசு இலவசமாக வழங்கும் என அறிவித்ததால் டிஜிட்டல் முறைக்கு கேபிள் இணைப்புகளை மாற்ற முடியாமல் உள்ளது. யாரும் செட்-டாப் பாக்ஸ் வாங்க முன்வரவில்லை என தெரிவித்தனர்.

    அப்போது அரசு தரப்பில் செட்டாப் பாக்ஸ் வாங்க செய்வதற்காக சேனல்களின் எண்ணிக்கையை குறைப்பதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. அதுபோல சேனல்களை குறைத்து கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.
    Next Story
    ×