search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை விடுமுறையால் வடமாநிலங்களுக்கு விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு
    X

    கோடை விடுமுறையால் வடமாநிலங்களுக்கு விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

    சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் விமான தேவை அதிகரித்துள்ளதால் ஏப்ரல், மே மாதங்களில் விமான கட்டணம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. #IndiGo #GoAir #flight
    சென்னை:

    கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு பொது மக்கள் சுற்றுலா மேற்கொள்வது வழக்கம். இதனால் இந்த மாதங்களில் விமான பயணத்தின் தேவை அதிகரிக்கும்.

    குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா பகுதிகளுக்கு பயணிகள் செல்வார்கள். அப்படி செல்லும் பயணிகள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம்.

    ஆனால் தற்போது விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாலும், என்ஜீனில் பழுது ஏற்பட்டுள்ளதாலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இண்டிகோ, கோஏர் நிறுவனங்களின் சில விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 1 வாரத்தில் மட்டும் கோ ஏர் விமானம் 12 முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    அதேபோல் ஏர்பஸ் ஏ320 நியோ ஜெட் விமானமும் ரத்து செய்யப்பட்டது.

    தற்போது சென்னை- டெல்லி, சென்னை-மும்பை வழியாக வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் விமான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு விமான கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.



    ஏப்ரல் 13-ந்தேதிக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.3527 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ.9722 ஆகவும், மும்பைக்கு ரூ.2271 ஆக இருந்த கட்டணம் ரூ.4167 ஆகவும் கொல்கத்தாவுக்கு ரூ.4115 ஆக இருந்த கட்டணம் ரூ.4850 ஆகவும் அதிகரித்துள்ளது.

    மே மாதம் 1-ந்தேதிக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.4239 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த விமான கட்டணம் ரூ.9722 ஆகவும், மும்பைக்கு ரூ.2933-ல் இருந்து ரூ.6619 ஆகவும், கொல்கத்தாவுக்கு ரூ.3082-ல் இருந்து ரூ.8378 ஆகவும் அதிகரித்துள்ளது.

    மே 5-ந்தேதிக்கு பிறகு சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.4239 என நிர்ணயிக்கப்பட்டிருந்த விமான கட்டணம் ரூ.9722 ஆகவும் மும்பைக்கு ரூ.2612-ல் இருந்து ரூ.6619 ஆகவும், கொல்கத்தாவுக்கு ரூ.3473-ல் இருந்து ரூ.6619 ஆகவும் அதிகரித்துள்ளது.

    இதுதொடர்பாக டிராவல் ஏஜெண்டுகள் கூறுகையில் சில விமானங்களில் மட்டுமே கட்டணம் அதிகமாக உயர்ந்துள்ளது. பல விமானங்களில் ரூ.1000 முதல் ரூ.1500 வரை உயர்ந்துள்ளது. மே மாதம் விடுமுறையில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பல விமான நிறுவனங்கள் கட்டண சலுகைகளை அளிக்க முன்வந்துள்ளன.

    கோலாலம்பூர் சுற்றுலா செல்பவர்களுக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும், வியட்நாம் சுற்றுலா செல்பவர்களுக்கு சில்க் ஏர் நிறுவனமும் கட்டண சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளன’’ என்றனர்.  #IndiGo #GoAir #flight
    Next Story
    ×