search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை விடுமுறையை சமாளிக்க புதிய சொகுசு விரைவு பஸ்கள் இயக்க திட்டம்
    X

    கோடை விடுமுறையை சமாளிக்க புதிய சொகுசு விரைவு பஸ்கள் இயக்க திட்டம்

    மே மாதத்தில் கோடை விடுமுறை கூட்டத்தை சமாளிப்பதற்காக புதிய சொகுசு விரைவு பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு அரசு விரைவு பஸ்களில் கூட்டமின்றி காலியாக ஓடுகிறது. ஆம்னி பஸ்களின் கட்டணமும், அரசு விரைவு பஸ் கட்டணமும் ஒன்றாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். அரசு பஸ்சில் கட்டணம் மட்டுமல்லாது, வசதிகளும் மிகவும் மோசமாக இருப்பதால் ஏறுவதற்கு தயங்குகிறார்கள்.

    நீண்ட தூரம் செல்லக் கூடிய அரசு விரைவு பஸ்கள் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நிரம்புகின்றன. மற்ற நாட்களில் கூட்டமின்றி செல்கின்றன. இதனால் கட்டணம் உயர்த்தப்பட்டும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படுவதால் வருவாய் இழப்பு தான் ஏற்படுகிறது.

    மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் பயணிகளை இழுக்கும் விதமாக புதிய பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கவும் இந்த வருட பட்ஜெட்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கவும் அறிவித்துள்ளது.

    5 ஆயிரம் புதிய பஸ்கள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வந்தால்தான் மக்கள் தயக்கமின்றி ஏறுவார்கள். தற்போது ஓடுகின்ற பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலானது.

    பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய விரும்பவில்லை. மக்களின் மனநிலையை அறிந்து புதிய பஸ்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.



    புதிய பஸ்கள் மே மாதம் முதல் படிப்படியாக வரத் தொடங்கும். தற்போது ‘கேஸ்’ வாங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ‘பாடி பில்டிங்’ செய்யும் பணி நடைபெறும்.

    மே மாதம் விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய சொகுசு பஸ்கள் வந்துவிடும் என்பதால் கோடை விடுமுறை கூட்டத்தை சமாளித்து விடலாம் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    அரசு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி இருந்தாலும் கூட கட்டண உயர்வாலும், ஓட்டை உடைசலான பஸ்களாலும் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை.

    தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகுதான் முன்பதிவு சூடுபிடிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு முதல் கட்டமாக 100 புதிய பஸ்கள் வரும். மே மாதத்தில் 50 சொகுசு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    புதிய பஸ்கள் இயக்குவதன் மூலம் இழந்த பயணிகளை மீண்டும் அரசு பஸ்களுக்கு கொண்டு வருவோம். ஆம்னி பஸ்களில் உள்ள வசதிகளை பார்த்துதான் மக்கள் செல்கிறார்க்ள. அதே வசதியை அரசு பஸ்களில் வழங்கினால் மக்கள் திரும்பி வருவார்கள். தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம் பகுதிகளுக்கு செல்லும் விரைவு பஸ்களில் பயணிகள் அதிகளவு பயணம் செய்கிறார்கள்.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் தான் கூட்டம் குறைந்து விட்டது.

    தனியாருக்கு போட்டியாக சொகுசு பஸ்களை இயக்குவதன் மூலம் பயணிகளை கவர முடியும். வருவாயை பெருக்க முடியும். அதனால் புதிய பஸ்கள் வரும் வரை அரசு போக்குவரத்து கழகங்கள் சரிவில் இருந்து மீள்வது கடினம் என்றார்.
    Next Story
    ×