search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்: அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.14.6 கோடி
    X

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்: அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.14.6 கோடி

    சென்னை மாநகராட்சியின் 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.14.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் 2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 2-வது ஆண்டாக அதிகாரிகள் தாக்கல் செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பூட்டிய அறைக்குள் அதிகாரிகளே தாக்கல் செய்தனர்.



    இதில் பெரிதாக புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. அமலில் இருக்கும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், பராமரிப்பு செலவு உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    2017-18-ம் ஆண்டு மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.2917.92 கோடி யாகும். மொத்த செலவு ரூ.3158.22 கோடி. பற்றாக்குறை ரூ.102.5 கோடி.

    அடுத்த நிதியாண்டில் (2018-19) மாநகராட்சி வருமானத்தை ரூ.3228.13 கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது செலவினம் ரூ.3269.79 கோடியாக இருக்கும் என்றும் பற்றாக்குறை ரூ.29.15 ஆக குறையும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் சொத்து வரியாக நடப்பாண்டில் ரூ.800 கோடி வசூலாகியுள்ளது. அடுத்த நிதியாண்டில் சொத்து வரியை ரூ.1,200 கோடிக்கு வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ரூ.350 கோடியாக இருக்கும் தொழில் வரியை ரூ.450 கோடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை நகரில் 2018-19-ல் புதிய பாலங்கள் கட்ட ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அம்மா உணவகங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கணக்கு தணிக்கை துறை கூறியபடி நடப்பு ஆண்டில் அம்மா உணவகங்களின் மேம்பாட்டுக்கு ரூ.14.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 7.1 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பாண்டு அது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் கால்வாய் பணிகளுக்கு கடந்த ஆண்டு ரூ.930 கோடியும், நடப்பாண்டு ரூ.613 கோடியும், மின்சாரத்துக்கு கடந்த ஆண்டு ரூ.127 கோடியும், நடப்பாண்டு ரூ.210 கோடியும், மாநகராட்சி கட்டிடங்களுக்கு கடந்த ஆண்டு ரூ.120 கோடியும் நடப்பாண்டு ரூ.150 கோடியும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.20.75 கோடியும், நடப்பாண்டு ரூ.16 கோடியும், கல்விக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி நடப்பாண்டு ரூ.12.60 கோடியும், சுகாரத்துக்கு கடந்த ஆண்டு ரூ.5.70 கோடி நடப்பாண்டு ரூ.6.15 கோடியும், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் மேம்பாட்டுக்கு கடந்த ஆண்டு ரூ.127.04 கோடி நடப்பாண்டு ரூ.90 கோடியும் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #tamilnews

    Next Story
    ×