search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு
    X

    டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு

    ஒவ்வொரு மாவட்ட மேலாண்மை அதிகாரிகளும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை விவரங்களை ஆய்வு செய்ததில் 3 மாதத்தில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 4500 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக மதுவிற்பனை குறைந்ததால் அதிகாரிகள் விற்பனை சரிவிற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு மாவட்ட மேலாண்மை அதிகாரிகளும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை விவரங்களை ஆய்வு செய்ததில் 3 மாதத்தில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் மட்டும் 36,600 மதுப்பெட்டிகள் விற்காமல் டாஸ்மாக் கடைகளில் தேங்கியுள்ளன. சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள், பீர் வகைகள் தேங்கி இருந்துள்ளது உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    90 நாட்களுக்கு மேலாக மதுபானங்கள் விற்காமல் டாஸ்மாக் கடைகளில் தேங்கி இருந்ததால் அதனை கொண்டு வந்த போக்குவரத்து செலவு நிர்வாகத்திற்கு தேவையற்றதாகி உள்ளது.

    டாஸ்மாக் குடோனில் இருந்து மதுக்கடைகளுக்கு கொண்டு சென்ற போக்குவரத்து செலவை ஈடு செய்ய ஒரு மதுப்பெட்டிக்கு ரூ.50 வீதம் அபராதம் விதிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஒரு கடையில் 20 மதுப்பெட்டிகள் விற்காமல் இருந்தது என்றால் அந்த கடையின் ஊழியர்களுக்கு ரு.1000 அபராதம் விதிக்கப்படுகிறது.

    மேலும் டாஸ்மாக் தலைமை நிர்வாக அலுவலகத்தில் இருந்து மாவட்ட மேலாளர் வழியாக சில்லரை விற்பனை கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடையில் விற்காமல் தேங்கி இருக்கும் மது வகைகள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி அன்று கணக்கெடுப்பு செய்து மாவட்ட மேலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. #Tamilnews
    Next Story
    ×