search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமயமலை பயணம் முடிந்து இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்
    X

    இமயமலை பயணம் முடிந்து இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் தனது 10 நாள் ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். #Rajinikanth
    சென்னை:

    தமிழக அரசியலில் ரஜினியும், கமலும் போட்டி போட்டுக்கொண்டு களம் இறங்கியுள்ளனர்.

    கடந்த ஆண்டு இறுதியில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக அதிரடி அறிவிப்பையும் ரஜினி வெளியிட்டார். அதனை தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து அவர் அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசனையையும் நடத்தினார்.

    ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் புதிய கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 28 மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் போடப்பட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினி, ‘‘தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவே நான் வந்துள்ளேன். எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னாலும் தர முடியும்’’ என்று பேசினார்.

    இதனை தொடர்ந்து ரஜினி மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் கடந்த 10-ந்தேதி திடீரென அவர் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

    இந்த ஆன்மீக சுற்றுப் பயணத்தின் போது ரஜினி காந்த்திடம் அரசியல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. காவிரி பிரச்சனை மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளிலும் ரஜினி மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டிய கமல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதுபோன்ற எந்த கேள்விகளுக்கும் ரஜினி பதில் அளிக்கவில்லை. கருத்து கூற மறுத்துவிட்டார்.

    கமலின் கருத்து பற்றிய கேள்விக்கு நான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாகவில்லை என்று அவர் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக இருந்த நிலையில் ரஜினியின் இமயமலை பயணம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஆவேசமாக கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

    இந்த நிலையில் ரஜினி தனது 10 நாள் ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், காவிரி பிரச்சனை தொடர்பாகவும் ரஜினிகாந்த் வாய் திறப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்ப பத்திரிக்கையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக சென்னை விமான நிலையத்திலும், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு அருகிலும் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

    ரஜினி சென்னை திரும்பியதும் மீண்டும் அதிரடி அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று புதிய கட்சியின் பெயரை அவர் அறிவிக்க உள்ளார். கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை வெளியிடுகிறார். இதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். #Tamilnews
    Next Story
    ×