search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட சிறுவன்.
    X
    மீட்கப்பட்ட சிறுவன்.

    மதுப்பழக்கத்துக்கு அடிமையாக்கி 12 வயது மகனை பிச்சை எடுக்க வைத்த பெற்றோர்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக்கி பெற்றோரே தனது 12 வயது மகனை பிச்சை எடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள கோவில்கள், பஸ் நிலையங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் நடமாடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் பஸ் நிலையங்கள், கோவில் விழாக்களுக்குச் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மண்டைக்காடு கோவில் விழா நடைபெறும் பகுதியிலும் அதிகாரிகள் ரோந்துச்சுற்றி வந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் சாலையோரம் படுத்து கிடந்தபடி பிச்சை எடுப்பதை கண்டனர். அவனை அதிகாரிகள் மீட்டு காப்பகத்திற்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்தனர். சிறுவனை அதிகாரிகள் அழைத்து செல்ல முயன்றதும் ஒரு தம்பதி ஓடி வந்து தடுத்தனர். சிறுவன் தங்களின் மகன் என்றும் அவனை சிலர் கடத்திச் செல்ல முயல்வதாகவும் கூச்சல் போட்டனர்.

    உடனே அதிகாரிகள் போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளை அழைத்து சிறுவனையும், அந்த தம்பதியையும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அந்த தம்பதி சிறுவனின் பெற்றோர் விஜய குமார்-மிக்கேல் அம்மாள் என தெரிய வந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகனுக்கு 12 வயது ஆகிறது. மகனின் கால்கள் ஒரு விபத்தில் ஊனமானது. இதனை பயன்படுத்தி பெற்றோர் மகனை பிச்சை எடுக்க வைத்தனர்.

    தினமும் பிச்சை எடுப்பதன் மூலம் மகனுக்கு ரூ.1000 வரை பணம் கிடைத்தது. கோவில் விழாக்களுக்கு சென்றால் ரூ. 1500 வரை பணம் கிடைக்கும்.

    இந்த பணத்திற்காக பெற்றோரே மகனை கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைத்தனர். விசாரணையில் இதனை தெரிந்து கொண்ட போலீசாரும், அதிகாரிகளும் அந்த சிறுவனை நாகர்கோவிலில் உள்ள சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் அந்த சிறுவனின் கால் ஊனத்தை சரி செய்யவும் ஏற்பாடு செய்தனர். இன்று அவனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கவும் உள்ளனர்.

    இச்சம்பவம் பற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு உறுப்பினர்களில் ஒருவரான அரசு போக்குவரத்து கழக மானேஜர் ஜெரோலின் கூறியதாவது:-

    மண்டைக்காடு பகுதியில் மீட்கப்பட்ட சிறுவன் ஏற்கனவே எங்களால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டவர். அப்போது சிறுவனின் பெற்றோர், இனி இது போல பிச்சை எடுக்க மாட்டோம் என்று உறுதி கூறி மகனை மீட்டுச் சென்று உள்ளனர்.

    காப்பகத்தில் இருந்து வெளியேறியதும் மீண்டும் பிச்சை எடுப்பதையே செய்து வந்தனர். இதற்காக சிறுவனுக்கு மது கொடுத்து போதையில் இந்த காரியத்தை செய்ய நிர்பந்தித்து உள்ளனர்.

    இதற்கு முன்பு சிறுவனை நாங்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அப்போது யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சிறுவனை அவனது பெற்றோர் அழைத்துச் சென்று விட்டனர். எனவே இம்முறை மாவட்ட நிர்வாகம், போலீசார் ஆகியோர் துணையுடன் பிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி குமுதா கூறியதாவது:- இப்போது மீட்கப்பட்ட சிறுவன் 6 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் பஸ் நிலையத்தில் எங்களால் மீட்கப்பட்டார். அதன் பிறகு பெற்றோர் உறுதி அளித்ததின் பேரில் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் ஓராண்டிற்கு முன்பு குளச்சல் பஸ் நிலையத்தில் வைத்து எங்களால் கண்டு பிடிக்கப்பட்டு மீண்டும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    அப்போதும் பெற்றோர் அழுது, கதறி மகனை அழைத்துச் சென்று விட்டனர். இப்போது மீண்டும் அதே சிறுவனை நாங்கள் கண்டு பிடித்து மீட்டு உள்ளோம். இனி அவருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×