search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடனடி அபராதத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
    X

    உடனடி அபராதத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகை செய்யும் அரசாணைகளை திரும்பப் பெற கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
    சென்னை:

    திருச்சி திருவெறும்பூரில் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை, இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து, உஷா என்ற பெண் பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ‘இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில், உஷா என்ற பெண் பலியாகியுள்ளார். வாகன ஓட்டிகளிடம் உடனடியாக அபராதம் வசூலிக்கும் அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது தான், இதுபோன்ற சம்பவம் நடக்க காரணமாகும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு முதலில் விளக்க நோட்டீசு கொடுத்து, அவர் விளக்கம் அளிக்காதபட்சத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அபராதத்தை போலீசார் வசூலிக்க வேண்டும்.

    ஆனால், வாகன ஓட்டிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல், உடனடியாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போலீசாருக்கு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர், இந்த மனு பொதுநல மனு அல்ல. உடனடியாக அபராதம் விதிக்கும் அரசாணையை ரத்து செய்ய முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டார்கள். #Tamilnews
    Next Story
    ×