search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரியில் பலத்த மழை
    X

    கோவை, திருப்பூர், நீலகிரியில் பலத்த மழை

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மழைக்கு தாராபுரத்தில் நெல் பயிர்கள் சேதம் அடைந்தது.
    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கோவையிலும் அதிக வெயில் அடித்தது. கோவையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக மாறியது. இரவும் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையால் எல்.ஐ.சி. சிக்னல், அவினாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இன்று காலை மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான தூறல் அடித்தது. இதனால் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்டது. மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை மிதமான மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வால்பாறை வன துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வன பகுதியிலும், எஸ்டேட் வன பகுதியிலும் ஆங்காங்கே காட்டுத் தீ பிடித்து வந்தது. அதனை வனத்துறையினர் அணைத்தனர். தற்போது மழை பெய்து உள்ளதால் வனப்பகுதியில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மழை காரணமாக தேயிலை தோட்ட நிர்வாகத்தினர், வால்பாறை பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. தாராபுரத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்தது. தாராபுரம், அலங்கியம், செலாம் பாளையம், காங்கயம் பாளையம், கொளத்துப் பாளையம், ஆத்துக்கால் புதூர், மீனாட்சி மங்கலம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த நெற் பயிர்கள் சேதம் அடைந்தது. 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த நெற் பயிர்கள் சேதம் அடைந்தது.

    மழை காரணமாக அதனை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள். மழை நீர் தேங்கி இருப்பதால் அறுவடை எந்திரத்தை வயலில் கொண்டு செல்ல முடியவில்லை என விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

    தாராபுரம் அலங்கியத்தில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலைய வளாகத்தில் மூட்டையாக அடுக்கி வைத்து தார்பாய் மூலம் மூடி இருந்தனர்.

    இந்த நெல் மூட்டைகள் பலத்த மழைக்கு சேதம் அடைந்தது. இதனால் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு இருந்தது. அதனை பறித்து வயலில் காய வைத்து இருந்தனர். நேற்று பெய்த மழைக்கு 100 டன் மதிப்புள்ள சின்ன வெங்காயம் நனைந்து சேதம் அடைந்தது.

    இது மட்டுமின்றி தாராபுரம் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த மக்கா சோளம், பெரிய வெங்காயம் ஆகியவையும் சேதம் அடைந்தது.

    அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை திருப்பூரில் உள்ள குடோனுக்கு அனுப்பி இருந்தால் சேதம் அடைந்து இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு நாளைக்கு ஒரு லாரியில் மட்டுமே நெல் மூட்டைகளை ஏற்றி சென்றதால் இருப்பு இருந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்றும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியது.

    இதனால் பள்ளி, கல்லூரி சென்று விட்டு திரும்பிய மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்கள் குடை பிடித்தபடி சென்றனர். மேட்டுப்பாளையம் பகுதியிலும் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது.
    Next Story
    ×