search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை வடிவமைப்பாளர் ராஜ்குமார் உடையார்
    X
    சிலை வடிவமைப்பாளர் ராஜ்குமார் உடையார்

    ஜெயலலிதா சிலை செய்யும் பணி வேறு சிற்பியிடம் ஒப்படைப்பு

    ஜெயலலிதா சிலை வடிவமைப்பில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அடுத்த மாதம் இறுதிக்குள் சிலை மாற்றி அமைக்கப்படுகிறது. சிலை செய்யும் பணி வேறொரு சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை வடிவமைப்பில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அடுத்த மாதம் இறுதிக்குள் சிலை மாற்றி அமைக்கப்படுகிறது. சிலை செய்யும் பணி வேறொரு சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை ரூ.7 லட்சம் மதிப்பில் 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த சிலை ஜெயலலிதாவின் முகத்தை போல் இல்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உள்பட பலரும் குற்றம்சாட்டினர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள், கருத்துகள் வந்தன.

    அதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கும்’ என்று தெரிவித்தார். அதன்படி, ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்த சிற்பி பிரசாத்திடம், ஜெயலலிதாவின் முகத்தை மாற்ற சொல்லி இருப்பதாக கூறப்பட்டது. அவரும் தனது சொந்த செலவிலேயே சிலையை மாற்றி தருவதாக கூறியிருந்தார்.

    இந்தநிலையில், ஜெயலலிதா சிலையுடன், எம்.ஜி.ஆர். சிலையையும் மாற்றம் செய்ய அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. சிலைகளை செய்யும் பணிகளையும் ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்றொரு சிற்பியான டி.ராஜ்குமார் உடையார் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த 2 சிலைகளையும் 1½ மாத காலத்தில் சிறப்பாக செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் இறுதியில் இந்த சிலைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

    நேற்று முன்தினம் வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலையை வடிவமைத்தவர் ராஜ்குமார் உடையார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×