search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளிக்காத சசிகலாவுக்கு நீதிபதி எச்சரிக்கை
    X

    ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளிக்காத சசிகலாவுக்கு நீதிபதி எச்சரிக்கை

    ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளிக்காத சசிகலாவுக்கு விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி எச்சரிக்கை விடுத்தார். அவகாசம் கேட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. #Sasikala #JayalalithaDeath
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்பியது.

    தனக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுக்கள், பிரமாண பத்திரங்கள், சாட்சியங்களின் நகல் ஆகியவற்றை அளிக்கும்பட்சத்தில் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக சசிகலா ஆணையத்தில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்தார்.



    இந்த மனுவை விசாரித்த ஆணையம், அனைத்து புகார் மனுக்கள், பிரமாண பத்திரங்கள், சாட்சியங்களின் நகல்களை சசிகலா தரப்பினர் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி, 2 ஆயிரத்து 956 பக்கங்கள் கொண்ட 450 ஆவணங்களை சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கடந்த மாதம் 27-ந் தேதி பெற்றுக்கொண்டார்.

    இதன்பின்பு, வாக்குமூலம் தாக்கல் செய்ய சசிகலாவுக்கு மேலும் 15 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘உண்மையிலேயே சசி கலாவுக்கு அக்கறை இருந்திருந்தால் ஆணையம் அமைக்கப்பட்டதும் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சியை உறவினரிடம் கொடுத்ததற்கு பதிலாக ஆணையத்தில் தாக்கல் செய்து இருக்கலாம். ஆணையம் அமைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டதும் முதல் ஆளாக சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு சசிகலா முன்வரவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

    தனக்கு எதிரான இந்த கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் சசிகலா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும், வாக்குமூலம் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய மனுவும் நீதிபதி ஆறுமுசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    ஜெயலலிதாவுடன் சசிகலா மட்டுமே வசித்து வந்தார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வரை போயஸ் கார்டனில் என்ன நடந்தது?, அவர் இறக்கும் வரை யில் என்ன நடந்தது? என்ற அனைத்து விஷயங்களையும் சசிகலா மட்டுமே அறிவார்.

    22.9.2016 அன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம், சூழ்நிலை போன்றவற்றை விசாரிக்கவும், அவர் இறக்கும்வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கவும் தான் தமிழக அரசால் இந்த ஆணை யம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து விவரம் தெரிந்தவர்கள் தங்களது வாக்குமூலத்தை 22.11.2017-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    ஆனால், சசிகலா தானாக முன்வந்து வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை. இதைத்தொடர்ந்து சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்ய 21.12.2017 அன்று ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்தநிலையில் தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் ஆவணங் களை அளிக்க வேண்டும் என்று சசிகலா கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அந்த ஆவணங்களையும் அளிக்க ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

    இதுபோன்ற சூழ்நிலையில் தான் ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள அனைவரின் சாட்சியங்களையும், புகார் மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரங்களையும் அளிக்க வேண்டும் என்று சசிகலா கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, அனைத்து ஆவணங்களையும் சசிகலா தரப்பு வக்கீல் பெற்றுக்கொண்டார். இதுபோன்ற சூழ்நிலையில் வாக்குமூலம் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் சசிகலா கோரிக்கை விடுத்து மனு செய்தார்.

    ஜெயலலிதா மரணத்தில் முடிவு எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான், சசிகலா குறித்த சில விஷயங்களை இந்த ஆணையம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் சுட்டிக்காட்டி இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த உத்தரவில் கூறி உள்ள விஷயங்களை சசிகலா ஒத்துக்கொண்ட பின்னர், அதை நீக்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எனவே, சசிகலா பற்றி கூறிய விஷயங்களை உத்தரவில் இருந்து நீக்க முடியாது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நடந்தது என்ன? என்பது குறித்து தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்யும்படி மட்டுமே இந்த ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், தனக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு பதில் அளிப்பதற்காக அதுதொடர்பான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே சசிகலா ஒவ்வொரு மனுவாக இந்த ஆணையத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

    ஆனால் தற்போது வரை சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை. மாறாக கால அவகாசம் கேட்டு 5 முறை மனு தாக்கல் செய்துள்ளார். சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனையில் என்ன நடந்தது? என்பதை வெளிப்படுத்த சசிகலா விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர், ஆணையத்துடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறார்.

    தற்போது, இந்த ஆணையத்துக்கு 2 வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஒன்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு நேரில் சென்று சசிகலாவின் வாக்குமூலத்தை பதிவு செய் வது. இன்னொன்று, சசிகலா தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை என்று கருதி எதிர்மறையான கருத்தை பதிவு செய்ய வேண்டியது தான்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவகாசம் கேட்ட சசிகலாவின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இதற்கிடையே சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியதாவது:-

    சசிகலாவுக்கு எதிரான சாட்சியங்கள், புகார் மனுக்கள், பிரமாண பத்திரங்களை படித்து பார்த்து சசிகலா கூறிய விவரங்களை வைத்து அவரது வாக்குமூலத்தை தயார் செய்து விட்டோம். ஒரு சில திருத்தங்கள் மட்டுமே உள்ளது. அந்த திருத்தங்களை செய்து சசிகலாவிடம் ஒப்புதல் பெற்று 12-ந் தேதி வாக்குமூலத்தை ஆணையத்தில் தாக்கல் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #JayalalithaDeath #tamilnews 
    Next Story
    ×