search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன்கடைகளை திறக்கக்கோரி ஒரு வாரம் தொடர் போராட்டம்- மார்க். கம்யூனிஸ்டு அறிவிப்பு
    X

    ரே‌ஷன்கடைகளை திறக்கக்கோரி ஒரு வாரம் தொடர் போராட்டம்- மார்க். கம்யூனிஸ்டு அறிவிப்பு

    புதுவையில் ரேஷன்கடைகளை திறக்கக்கோரி வரும் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க். கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசு நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்வதை நிறுத்தி இந்திய உணவுக்கழக செயல்பாடை முடக்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலதிபர்களுக்கு சாதகமானது.

    அதோடு புதிய உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.835 வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரே‌ஷனில் பொருட்கள் இல்லை என்று முடிவெடுத்துள்ளது. நாள்தோறும் அரிசி, சர்க்கரை விலை ஏறி வருகிறது. மண்எண்ணைக்கு பதிலாக கியாஸ் இணைப்புக்கு முன்னுரிமை கொடுத்து மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டு முதல் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வர உள்ளது.

    அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் பொது விநியோக முறைக்கு மாற்றாக சந்தைமயமாக்கி வர்த்தகர்களுக்கு சாதகமாக மத்திய பா.ஜனதா அரசின் கொள்கைகள் வழி வகுக்கிறது. இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் பரிசோதனை களமாக புதுவை மாநிலத்தை மத்திய பா.ஜனதா அரசு மாற்றியுள்ளது. புதுவைக்கு வழங்க வேண்டிய மண்எண்ணை, சர்க்கரை நிறுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கில் அரிசிக்கு பதில் பணம் போட்டனர்.

    தற்போது பண்டிகை காலங்களில் மாநில அரசு வழங்கும் 20 கிலோ அரிசியும், சில பொருட்கள் மட்டுமே ரே‌ஷன் கடையில் வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை உள்ளிட்ட பண்டிகை கால இலவசம் நிறுத்தப்பட்டுவிட்டது. மாதந்தோறும் வழங்கும் 20 கிலோ அரிசியும் நிறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய ஆட்சியாளர்கள் புதுவையை வஞ்சித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியாளர்களோ தேர்தல் கால வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாமல் பா.ஜனதா அரசின் திட்டங்களை புதுவையில் அமல்படுத்தி வருகின்றனர். புதுவை மாநிலத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் ரே‌ஷன்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல புதுவையிலும் ரே‌ஷன்பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடிய ரே‌ஷன்கடைகளை திறக்க வேண்டும். உணவு உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஒரு வாரம் ரே‌ஷன்கடைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநிலக்குழு உறுப்பினர்கள் முருகன், பெருமாள், ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். #tamilnews

    Next Story
    ×