search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியை சந்தித்து கவிதை வாசித்த வைரமுத்து
    X

    கருணாநிதியை சந்தித்து கவிதை வாசித்த வைரமுத்து

    கவிஞர் வைரமுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, ‘பிடர் கொண்ட சிங்கமே பேசு’ என்ற தனது கவிதையை வாசித்தார். இந்த காட்சி உருக்கமாக இருந்தது.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் தனது கோபாலபுரம் வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்தநிலையில் அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம் போன்ற இடங்களுக்கு கருணாநிதி சென்று வந்தார். 1½ வருடங்கள் கழித்து தனது மகள் கனிமொழி எம்.பி. வீட்டுக்கும் கருணாநிதி சென்றார்.



    இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி, மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளன்று மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் கருணாநிதியை சென்று பார்த்தார். மற்றொரு நாளில் தனது கொள்ளுப் பேரன் மகிழனுடன் கருணாநிதி கிரிக்கெட் விளையாடுவதுபோன்ற வீடியோ காட்சிகள் வெளியாயின.

    இந்த வீடியோ காட்சிகளால் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இந்தநிலையில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, கவிஞர் வைரமுத்து சந்தித்து கவிதை வாசிக்கும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. அந்த வீடியோ காட்சியில் கருணாநிதி கையில் வைரமுத்துவின் கவிதை அச்சிடப்பட்ட காகிதம் ஒன்று இருக்கிறது.

    அப்போது கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து கைகொடுக்கிறார். அவரது கையை பிடித்தபடியே கருணாநிதியை வாழ்த்தும், ‘பிடர் கொண்ட சிங்கமே பேசு’, என்ற தனது கவிதையை வைரமுத்து வாசிக்கிறார்.

    கவிஞர் வைரமுத்து கவிதையை வாசிக்க வாசிக்க அதை கருணாநிதி ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் உற்று கவனிக்கிறார். அவருக்கு பிடித்த வரிகள் வரும்போதெல்லாம் அதற்கு கருணாநிதி புன்னகைக்கிறார், உற்சாகம் அடைகிறார். நிமிர்ந்து உட்காரும் கருணாநிதியின் முகமும் மலர்கிறது. இந்த காட்சி உருக்கமாக இருந்தது.

    கவிதையின் இறுதியில் ‘பிடர் கொண்ட சிங்கமே பேசு’ என்று மீண்டும் கூறி, கவிஞர் வைரமுத்து உற்சாகமாகவும், உருக்கமாகவும் தனது கவிதையை முடிக்கிறார். அப்போது வைரமுத்துவின் காதில் கருணாநிதி ஏதோ சொல்கிறார்.

    அந்த கவிதை வருமாறு:-

    “பிடர் கொண்ட சிங்கமே பேசு... இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும், படர்கின்ற பழமை வாதம் பசையற்று போவதற்கும், சுடர்கொண்ட தமிழை கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்க... பிடர் கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய் திறந்து...

    யாதொன்றும் கேட்க மாட்டேன்... யாழிசை கேட்க மாட்டேன்... வேதங்கள் கேட்க மாட்டேன்... வேய்ங்குழல் கேட்க மாட்டேன்... தீதொன்று தமிழுக் கென்றால் தீக்கனல் போலெழும்பும் கோதற்ற கலைஞரே... நின் குரல் மட்டும் கேட்க வேண்டும்...”

    இவ்வாறு அந்த கவிதை நிறைவடைகிறது. இந்த கவிதை அடிக்கடி கருணாநிதியிடம் போட்டு காட்டப்படுகிறது.  #tamilnews
    Next Story
    ×