search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரியை ஆய்வு செய்ய சென்ற கவர்னர் கிரண்பேடியிடம் கிராம மக்கள் சரமாரி புகார்
    X

    ஏரியை ஆய்வு செய்ய சென்ற கவர்னர் கிரண்பேடியிடம் கிராம மக்கள் சரமாரி புகார்

    ஏரியை ஆய்வு செய்ய சென்ற கவர்னர் கிரண்பேடி, பொதுமக்களிடம் ஏன் கழிவறை கட்ட வில்லை என்று கேட்டார். ஆரோவில் நிர்வாகம் இடம் கொடுக்க மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். #kiranbedi

    சேதராப்பட்டு:

    சர்வதேச நகரான ஆரோவில்லையொட்டி புதுவை காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஆலங்குப்பம், புதுநகர், சஞ்சீவிநகர், அன்னை நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் கைவினை பொருட்களை தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கைவினை பொருட்களை ஆரோவில்லுக்கு வரும் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் அப்பகுதி மக்கள் பயனடைவதாலும், சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருவதாலும் இந்த பகுதியை சுற்றுலா தலமாக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது.

    அங்குள்ள ஏரியை சீரமைத்து படகு குழாம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தற்போது உழவர்கரை நகராட்சி மூலம் ஏரி தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை 6.15 மணியளவில் கொட்டும் பனியில் ஏரியை ஆய்வு செய்ய காரில் வந்தார்.

    அப்போது ஏரியையொட்டி உள்ள பகுதிகளில் ஏராளமானோர் திறந்த வெளியில் கழிப்பிடம் சென்றதை பார்த்த கவர்னர் கிரண்பேடி அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னுடன் வந்த உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேசிடம் இப்பகுதி மக்களுக்கு தனி நபர் கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் கழிவறை கட்ட நிதி அளிக்கப்படவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ஆணையர் அனைவருக்கும் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் பயனாளிகள் கழிவறை கட்ட முன்வர வில்லை என்று பதில் கூறினார்.

    இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் ஏன் கழிவறை கட்டவில்லை? என்று கவர்னர் கேட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விட்ட நிலையில் கழிவறை கட்ட குறைந்த நிதியே தருவதால் கழிவறை கட்ட முடியவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து வீடு தோறும் கழிவறை கட்டும் வரை இந்த பகுதியில் 3 இடங்களில் பொது கழிப்பிடம் கட்ட உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு கவர்னர் உத்தரவிட்டார். மேலும் ஏரியை சீரமைத்து படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி கவர்னர் அறிவுறுத்தினார்.

    இதன் பின்பு அன்னை நகருக்கு வந்த கவர்னர் கிரண்பேடியை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு ஆரோவில் நிர்வாகம் குறித்து சரமாரி புகார் தெரிவித்தனர்.

    கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இப்பகுதியில் உள்ள ஆரோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் பொது கழிவறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

    ஆனால், ஆரோவில் நிர்வாகம் விளையாட்டு மைதானம் அமைக்க மட்டும் அனுமதி அளித்தது. பொது கழிவறை கட்ட அனுமதி அளிக்க மறுத்து விட்டது. சுகாதாரத்தை விட விளையாட்டு மைதானம் தேவையா? என்று கவர்னரிடம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேசிடம் ஆரோவில் நிர்வாகத்திடம் பேசி இந்த இடத்தில் பொது கழிவறை கட்ட அனுமதி பெறுமாறு கேட்டு கொண்டார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு தலைவி ராஜலட்சுமி இங்குள்ள சமுதாய நல கூடத்தை ஏழை மக்கள் பயன்படுத்த முடியவில்லை என்றும், சமுதாய நல கூடத்தின் சாவி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியிடம் இருப்பதால் அந்த அதிகாரிகளை அணுகி விசே‌ஷ நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.

    மேலும் சமுதாய நல கூடத்தில் தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லை என்றும் கவர்னரிடம் முறையிட்டார். சமுதாய நல கூடத்தை மகளிர் சுய உதவி குழுவிடம் ஒப்படைத்தால் அதனை உரிய முறையில் பயன்படுத்தலாம் என்றும், அதன் மூலம் வருவாயும் அரசுக்கு கிடைக்கும் என்று கவர்னரிடம் ராஜலட்சுமி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சமுதாய நல கூடத்தை மகளிர் சுய உதவி குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். பின்னர் அவர் ராஜ்நிவாசுக்கு புறப்பட்டு சென்றார். #tamilnews #kiranbedi 

    Next Story
    ×