search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நிறுவனம் எது? இன்று முடிவு
    X

    ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நிறுவனம் எது? இன்று முடிவு

    ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் நிறுவனம் எது என்பதை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில் நிதித்துறை அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள்.
    சென்னை:

    தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி உயிர் இழந்தார்.

    இதை தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    அங்கு ரூ.43.63 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிக்கு கடந்த மாதம் 12-ந்தேதி பொதுப்பணித்துறை ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, ஒப்பந்த புள்ளியை இறுதி செய்வதற்கான கால அவகாசத்தை கடந்த 21-ந்தேதி வரை நீட்டித்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டது.

    இந்தபணியில் ஈடுபடுவதற்காக பி.எஸ்.கே, கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாஜலபதி, மாணிக்கம், ராஜதுரை ஆகிய 5 கட்டுமான நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தன.

    இதில் குறைவான தொகையை குறிப்பிடும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அதிகாரி தலைமையில் ஒப்பந்தப்புள்ளி ஒப்பளிப்பு குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில், ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ள 5 நிறுவனங்களில் குறைந்த தொகையை குறிப்பிட்டுள்ள நிறுவனத்துக்கு கட்டுமான பணியை மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்படும்.

    உத்தரவை பெற்ற நிறுவனத்துடன் அடுத்த 15 நாட்களில் ஒப்பந்தம் போடப்படும். தொடர்ந்து கண்காணிப்பு பொறியாளர் மேற்பார்வையில் பணி மேற்கொள்ளப்படும். இந்த பணியை 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த 24-ந்தேதி, அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கான பணியை தொடங்குவதாக இருந்தது.

    ஆனால் ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் திட்ட பணிகளுக்கு 30 நாட்களுக்கு பிறகு தான் ஒப்பந்தம் கோர வேண்டும் என்ற விதி இருப்பதால் அன்றைய தினத்தில் பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். #tamilnews
    Next Story
    ×