search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருக்கலைப்பு புகார் எதிரொலி: திருவண்ணாமலை தனியார் ஆஸ்பத்திரிகளில் சோதனை
    X

    கருக்கலைப்பு புகார் எதிரொலி: திருவண்ணாமலை தனியார் ஆஸ்பத்திரிகளில் சோதனை

    கருக்கலைப்பு புகார் தொடர்பாக மத்தளாங்குளத்தெரு உள்பட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்கள், அதிகரித்து வருகிறது. மேலும் குழந்தை திருமணம் மற்றும் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகம் நடக்கிறது.

    ஆண் குழந்தைகளின் பிறப்பு சராசரி விகிதத்தை காட்டிலும், பெண் குழந்தை பிறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவு. இளம் வயது திருமணம், பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமை போன்ற காணங்களால் கருக்கலைப்பு தொடர்ந்து நடக்கிறது.

    கருக்கலைப்புகள் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால், மூலைக்கு மூலை திரும்பிய பக்கமெல்லாம் தனியார் ஆஸ்பத்திரிகளும், கருக்கலைப்பு மையங்களும் அதிகரித்துள்ளன.

    சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதும், கருவில் உள்ள குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என பாலினம் தெரிவிப்பதும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

    திருண்ணாமலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்த ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் 3 ஸ்கேன் மையங்கள் சீல் வைக்கப்பட்டன.

    அந்த மருத்துவமனை டாக்டர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துவந்துள்ளார்.

    சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கருக்கலைப்பு செய்ததற்காக போலி டாக்டர்கள் பலர் கைதாகியிருந்தாலும், தொழில்முறை மருத்துவராக உள்ளவர்களும் பணத்திற்காக கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர்.

    இந்த திடுக்கிடும் புகார் எதிரொலியாக, சென்னையில் இருந்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் குருமூர்த்தி தலைமையில் 10பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் திருவண்ணாமலைக்கு இன்று காலை வந்தனர்.

    மத்தளாங்குளத்தெரு உள்பட திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கருக்கலைப்பு கண்டறியப்பட்டால், அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைப்பதுடன், டாக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    Next Story
    ×