search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
    X

    மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

    மின்வாரிய ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தம் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது.
    சென்னை:

    மின்வாரிய தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மின்வாரியத்திடம், தொழிற்சங்க நிர்வாகிகள் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் தொழிலாளர்களுக்கு 2.57 கணக்கீட்டு காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொழிலாளர்களுக்கு 2.57 கணக்கீட்டு காரணி ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் வாரியம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று கையெழுத்திட்டனர். அப்போது மின்வாரிய தலைவர் சாய்குமார், எரிசக்தித்துறை செயலாளர் விக்ரம் கபூர், தொழிலாளர் நல ஆணையர் பாலச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய கூட்டமைப்பு(சி.ஐ.டி.யு.), தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேஷன் (ஐ.என்.டி.யு.சி.), பி.எம்.எஸ். உள்பட அங்கீகரிக்கப்பட்ட 17 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய மின்ஊழியர் மத்திய கூட்டமைப்பு தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம், ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடிக்கக்கூடாது. பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது’ என்று வலியுறுத்தினார். இதற்கு அண்ணா தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அமைச்சர் தங்கமணி தலையிட்டு அமைதி ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-



    தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்படும்போது மின்வாரிய ஊழியர்களின் பணி தான் முக்கியமான பணியாக இருக்கிறது. உதாரணமாக வார்தா, ஒகி புயல் போன்ற நேரங்களில் இரவு, பகல் பார்க்காமல் தங்களுடைய பணியை தியாக உணர்வோடு சிறப்பாக செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மின்வெட்டு ஒரு நிமிடம் கூட இல்லாதநிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு தொழிலாளர்கள் தான் காரணம். அப்படிப்பட்ட தொழிலாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருக்கும்.

    அவர்களின் முக்கிய கோரிக்கையான 2.57 கணக்கீட்டு காரணி ஊதிய உயர்வை அரசு வழங்குகிறது. இதன்மூலம் ஊழியர்கள் 79,100 பேர், அலுவலர்கள் 11,169 பேர் என மொத்தம் 90 ஆயிரத்து 269 பேர் பலன் பெறுவார்கள். மாதம் ஒன்றுக்கு களப்பணி உதவியாளருக்கு குறைந்தபட்சம் ரூ.3,175-ம், அதிகபட்சம் ரூ.7,775-ம், அலுவலர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,800-ம், அதிகபட்சம் ரூ.27,375-ம் கிடைக்கும்.

    இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,317 கோடியே 87 லட்சம் கூடுதல் செலவாகும். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் தினக்கூலி ரூ.250-ல் இருந்து ரூ.380 ஆக உயர்த்தப்படுகிறது. 2 ஆயிரம் மின்பாதை ஆய்வாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்படுகிறது. இதனால் வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.86.42 கோடி கூடுதல் செலவு ஆகும்.

    அனைத்து ஆரம்பநிலை பதவிகளுக்கும் பயிற்சி காலம் 3 மாதங்களாக குறைக்கப்பட்டு பயிற்சி காலத்திலேயே காலமுறை ஊதியம் வழங்கப்படும். வாரியம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு 2015-ம் ஆண்டில் இருந்து சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

    மாதந்தோறும் 4-வது சனிக்கிழமை மின்வாரியத்துக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதை ஈடுகட்டும் விதமாக பணி நேரம் மாலையில் 15 நிமிடங்கள் நீட்டிக்கப்படும். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.   #tamilnews

    Next Story
    ×