search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.3000 முதல் ரூ.18 ஆயிரம் வரை கிடைக்கும்
    X

    மின்சார வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.3000 முதல் ரூ.18 ஆயிரம் வரை கிடைக்கும்

    மின்சார வாரிய ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இதனால், ரூ.3000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு 2 வருடமாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படாமல் இருந்தது. 2.57 ஊதிய உயர்வு காரணியாக நிர்ணயிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை மின்வாரிய தலைவர் மற்றும் அமைச்சர் ஏற்றுக்கொண்ட போதிலும் நிதிச் செயலகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒப்பந்தம் கால தாமதம் ஆனதை கண்டித்து சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் நடத்தின.

    ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த ஒரு வார கால அவகாசம் அமைச்சர் தங்கமணி கேட்டார். அதனை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டத்தில் இறங்கினர்.

    ஒரு வார கால அவகாசத்திற்கு பிறகு இன்று ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 ஊதிய உயர்வு காரணி வழங்க வாரியம் சம்மதித்து ஒப்பந்தம் போடப்படுகிறது.

    இன்று மாலை அமைச்சர் தங்கமணி தலைமையில், வாரிய தலைவர் சாய்குமார் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.



    புதிய சம்பள உயர்வு 1.10.2017 முதல் கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்பின் மின் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.5000 உயருகிறது. அதாவது ரூ.13 ஆயிரம் அடிப்படை சம்பளமாக பெற்றவர்கள் இனி ரூ.18 ஆயிரம் பெறுவார்கள்.

    சம்பள உயர்வு ரூ.3000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதல் நிலை மற்றும் 2-ம் நிலை அலுவலர்களுக்கு சுமார் ரூ.18 ஆயிரம் வரை கூட வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் பாவலன் கூறியதாவது:-

    “மின் தொழிலாளர்களில் கடை நிலை ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் கூட சுமார் ரூ.5 ஆயிரம் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பணிச்சுமைகள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை மின் வாரியம் ஏற்றுக் கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

    கணக்கெடுப்பவருக்கு பணிச்சுமை மிகப்பெரிய அளவில் உள்ளது. லட்சக் கணக்கான மின் இணைப்பு பணிகளுக்கான கணக்குப் பணிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும் தணிக்கை பிரிவிற்கு வழங்கபபட்ட பணிச்சுமை தொடர்பாகவும் எந்த முழுமையான முடிவும் செய்யப்படவில்லை” என்றார்.
    Next Story
    ×