search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று அனைத்துக்கட்சி கூட்டம் - காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை
    X

    இன்று அனைத்துக்கட்சி கூட்டம் - காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. #CauveryVerdict #AllPartyMeeting
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று தமிழக அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.

    காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தது.

    இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதிலுள்ள சாதக, பாதக அம்சங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச்செல்லவும், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை முழுமையாக பெறவும், சட்டவல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கப்படும்” என்று தீர்ப்பு வெளியான அன்று தெரிவித்தார்.

    கடந்த 19-ந் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இப்பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக 22-ந் தேதி காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது.

    இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களை பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரியைப் பொறுத்தவரை அனைவரும் மனமாச்சரியங்களை மறந்து ஒன்றுபட்டு, தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்கான அனைத்து வழிவகைகளையும் ஆலோசிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, அனைத்து கட்சி கூட்டத்துக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை வரிசை போன்றவை பற்றியும் கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி சார்பில் பிரதிநிதிகளுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பில் தலா ஒருவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 10 விவசாயிகள் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வேட்டவலம் மணிகண்டன், அய்யாகண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



    அந்த கடிதத்தில், “காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள இறுதித் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக 22-ந் தேதியன்று (இன்று) காலை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் விவசாய சங்கத்தின் தலைவர் என்ற முறையில் தாங்களோ அல்லது தங்களின் பிரதிநிதியோ கலந்துகொண்டு தங்களுடைய மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

    அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆகியவற்றுக்கு தகுதியின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    எந்தெந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் முடிவு செய்ததாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது. அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களைச் சேர்த்து மொத்தம் 44 இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு கருத்து தெரிவிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். பின்னர் அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் கருத்து கூறுவார்கள்.

    மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கூறிய கருத்துகளை தொகுத்து கூட்ட இறுதியில் தீர்மானம் வாசிக்கப்படும். இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது மற்றும் டெல்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி ஆகியோரை சந்திப்பது பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. #CauveryVerdict #CauveryWater #CauveryIssue #AllPartyMeeting
    Next Story
    ×