search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
    X

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

    ஒரே தொகுதிக்குள் 2 மாவட்டங்கள் வருவதை தவிர்ப்பதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் ஆய்வு குழு ஒன்றை மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இதனால், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து அண்ணா அறிவாலயத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.

    கோவை, நீலகிரி, தஞ்சை, காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் உள்பட இதுவரை 25 மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தி உள்ளார்.

    இதில் பங்கேற்ற நிர்வாகிகள் கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல்களை எடுத்துரைப்பதுடன், கட்சி வளர்ச்சிக்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

    தி.மு.க.வில் தற்போது நிர்வாக வசதிக்காக 65 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சில மாவட்டங்கள் பரப்பளவில் பெரிதாக உள்ளன.

    ஒரு சட்டமன்ற தொகுதியில் 2 மாவட்டச் செயலாளர்களின் பகுதிகள் வருவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. தொகுதி எம்.எல்.ஏ. ஒரு நிகழ்ச்சி நடத்தினால் 2 மாவட்டச் செயலாளர்களிடம் தகவல் சொல்ல வேண்டி உள்ளது. இது கட்சியில் பல்வேறு நடைமுறை சிக்கலை உருவாக்குவதாக மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கோவை, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், ஆலந்தூர், சோளிங்கநல்லூர், மேடவாக்கம், மூவரசம்பட்டு என பல ஊர்கள் 2 தொகுதியில் வருவதால் இதை மறு சீரமைத்து ஒரே மாவட்டத்துக்குள் அல்லது ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் கிராமங்கள் வருமாறு பிரிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதை கவனமுடன் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் மாவட்டங்களில் நிலவும் நடைமுறை சிக்கலை களைவதற்கு முடிவு எடுத்துள்ளார்.

    இதற்காக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளார். இதில் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.



    இந்த குழு ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் குளறுபடிகளை ஆய்வு செய்து அதை சரி செய்யும் வகையில் அறிக்கை தயாரித்து மார்ச் 20-ந் தேதிக்குள் மு.க.ஸ்டாலினிடம் வழங்க உள்ளனர்.

    இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வில் உள்ள மாவட்ட நிர்வாகங்களை மேலும் எளிமையாக்குவதற்கும், சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் மாவட்ட கழகங்களில் உரிய மறுசீரமைப்பு செய்வதற்கும் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தலைமைக்கு பரிந்துரை செய்ய டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு தனது பணியை தொடங்கி உள்ளது.

    ஒரு சட்டமன்ற தொகுதிக்குள் 2 மாவட்டச் செயலாளர்கள் ஏரியா வருவதால் அதை தவிர்க்கும் வகையில் ஒரே மாவட்டத்துக்குள் அந்த பகுதிகளை சேர்ப்பது அல்லது ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் வருவாய் கிராமங்கள் வருவது போல் பிரிக்க இந்த குழு ஆய்வு மேற்கொள்ளும். மாநகராட்சி பகுதிகளில் குளறுபடி அதிகம் உள்ளதால் அது சீரமைக்கப்படும்.

    இதன் அடிப்படையில் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன் சாதக பாதகங்கள் அனைத்தையும், குழு ஆராய்ந்து மார்ச் 20-ந் தேதிக்குள் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில் மாவட்டங்களின் மறுசீரமைப்பு நடைமுறைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
    Next Story
    ×