search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைவாய்ப்பு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்த கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் திருநங்கை மனு
    X

    வேலைவாய்ப்பு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்த கோரி முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் திருநங்கை மனு

    வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் திருநங்கை ஷாணவி மனு கொடுத்தார்.
    சென்னை:

    திருநங்கைகளுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது. எனவே எனக்கும், வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் திருநங்கை ஷாணவி மனு கொடுத்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்தவர் ஷாணவி பொன்னுசாமி (வயது 26). திருநங்கையான இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் நேற்று மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஏழ்மை குடும்பத்தில் பிறந்தேன். என் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக பொறியியல் பட்டம் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பின்னர் சமூக புறக்கணிப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.

    நீண்டகால வேலை தேடலுக்கு பின்னர், வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஏர் இந்தியா வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தேன். அங்கு பெண்ணாக அங்கீகரிக்கப்பட்டு வேலைக்கு சேர்ந்தேன். ஒரு ஆண்டு அனுபவத்துக்கு பிறகு பாலியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டது. அதை தமிழ்நாடு அரசிதழில் முறைப்படி அறிவித்தேன்.

    இந்த நிலையில், விமான பணிக்கான வேலைவாய்ப்பை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. ஆண், பெண்களுக்கு மட்டுமே தனித்தனியாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி திருநங்கையருக்கான வாய்ப்பு தரப்படவில்லை.

    எனவே, பெண்களுக்கான பிரிவில் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வுக்கான கடிதத்தை பெற்றேன். நேர்முகத் தேர்வின்போது, நான் திருநங்கை என்பதை தெரிவித்தேன். திறமையாக செயல்பட்டாலும், இறுதி முடிவில் எனது பெயர் வரவில்லை. அடுத்த தேர்வுக்காகவும் விண்ணப்பித்தேன். இப்படி 4 முறை நேர்முகத்தேர்வை நிறைவு செய்த பிறகும் இறுதிப்பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை.

    ஆண், பெண்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பதால் அதில் திருநங்கையர்களுக்கு இடமில்லை என்று எனக்கு தெரியவந்தது. எனக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்படி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வலியுறுத்தினாலும், அதற்கு செவிசாய்க்க ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மறுத்துவிட்டார்.

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நான் சென்றபோது என்னை வெளியேற சொல்லிவிட்டனர். திருநங்கைகளை பணியில் சேர்க்க இயலாது என்றும் கூறிவிட்டனர். இதுதொடர்பாக நான் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தகுதியும், திறமையும் இருந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காததால் கருணைக்கொலை செய்யும்படி ஜனாதிபதியிடம் விண்ணப்பித்தேன். திருநங்கைகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது. எனவே எனக்கும் வேலைவாய்ப்பை வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஷாணவி, ‘தகுதி, திறமை இருந்தும், என்னுடைய பாலினத்தை காரணம் காட்டி வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டால்தான் இந்த பிரச்சினை தீரும்.

    மும்பையில் நான் குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேற கூறிவிட்டனர். தாயாரும் என்னுடன் பேசுவதில்லை. எனவே தங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார். #tamilnews

    Next Story
    ×