search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதிக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மனு
    X

    லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதிக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மனு

    உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்ச வாங்கி கைதான துணைவேந்தர் கணபதிக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் கணபதி கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் பேராசிரியர் தர்மராஜூம் கைதானார்.

    கைது செய்யப்பட்ட அன்றே, இருவரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவரது தரப்பில் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 8-ந் தேதி விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

    பின்னர் துணைவேந்தர் கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் காவல் முடிந்து 16-ந் தேதி கணபதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜெயிலில் முதல் வகுப்பு வசதி கேட்டு மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலிக்க மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். ஆனால் இதுவரை அவருக்கு ஜெயிலில் சிறப்பு வசதி செய்யப்படவில்லை.

    இதற்கிடையே துணை வேந்தர் கணபதிக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல் ஞானபாரதி 2-வது முறையாக இன்று லஞ்ச வழக்குகள் விசாரணை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஜான் மினோவிடம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    பேராசிரியர் தர்மராஜூக்கு ஜாமீன் கேட்டு ஏற்கனவே சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த இரு ஜாமீன் மனுக்களும் ஒரே நேரத்தில் விசாரணைக்கு வரலாம் என கூறப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×