search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ செல்போன் அபேஸ்
    X

    அமைச்சர் செல்லூர் ராஜூ செல்போன் அபேஸ்

    திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் கொள்ளைபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜம்னாமரத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு விழாநடந்தது.

    அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, வனரோஜா எம்.பி, கலெக்டர் கந்தசாமி, கூட்டுறவு பதிவாளர் ஞானசேகரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர் வனத்துறை ஓய்வு விடுதியில் உணவருந்த சென்றனர். அதை தொடர்ந்து மாலை 3.45 மணிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

    சிறிது தூரம் சென்றநிலையில், அமைச்சரின் விலை உயர்ந்த ஐபோன் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பதறிய அவர், வனத்துறை ஓய்வு விடுதியில் இருக்கலாம் என நினைத்து, அதிகாரிகளிடம் விவரத்தை சொல்லி செல்போனை எடுத்து வரச்சொன்னார்.

    அதிகாரிகள் அங்கு சென்று தேடிப்பார்த்தும் செல்போன் கிடைக்கவில்லை. இதனால், நடுரோட்டில் அமைச்சரின் கார் நிற்க, அதற்கு பின்னால் எல்லா கார்களும் வரிசையாக நின்றன.

    நீண்ட நேரம் தேடியும் செல்போன் எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இதனால் டென்‌ஷனான அமைச்சர், எப்படியாவது போனை தேடி எடுத்துட்டு வாங்க என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கிடையே, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் நடுரோட்டில் நின்றபடியே கட்சிக்காரர்களிடமும், அதிகாரிகளிடமும் மாயமான செல்போன் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.

    கலெக்டர் கந்தசாமி, கூட்டுறவு பதிவாளர் ஞானசேகரன், சப்- கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோரும் பதட்டத்துடன் அங்குமிங்கும் அலைந்த படியே செல்போனை கண்டு பிடிக்க எவ்வளவோ முயன்றும் கடைசி வரை கிடைக்கவில்லை. அமைச்சரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, ஒன்றிரண்டு முறை ரிங் போனது. அதன்பிறகு சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    அமைச்சரின் ஐபோனை கண்டுபிடிக்க "சைபர் கிரைம்" போலீசாரின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. #Tamilnews
    Next Story
    ×