search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான் வேட்டைக்கு பயன்படுத்திய கள்ள துப்பாக்கி பறிமுதல்- 2 பேர் சிக்கினர்
    X

    மான் வேட்டைக்கு பயன்படுத்திய கள்ள துப்பாக்கி பறிமுதல்- 2 பேர் சிக்கினர்

    கூடலூர் அருகே மான் வேட்டைக்கு பயன்படுத்திய கள்ள துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சிக்கிய 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தருமகிரி பகுதியில் கள்ள துப்பாக்கி மூலம் மான் வேட்டையாடப்பட்டதாக வனத்துறைக்கு கிராம மக்கள் ரகசிய தகவல் கொடுத்தனர். இதன் பேரில் கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தருமகிரி கிராமத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ஒருவரை பிடித்து கிராம மக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ஒரு கள்ள துப்பாக்கி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வீட்டில் இருந்த நபரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கள்ள துப்பாக்கி மூலம் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்றும், சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் புதைத்து வைத்திருந்த மான் தலை மற்றும் தோல் எலும்புகள் கொண்ட உடற்பாகங்களை வனத்துறையினர் தோண்டி எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள ஆசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரை வனத்துறையினர் விசாரணைக்காக கூடலூர் ஈட்டிமூலா வனச்சரக அலுவலகத்துக்கு நேற்றிரவு 7½ மணிக்கு அழைத்து சென்றனர். மேலும் மான் வேட்டைக்கு பயன்படுத்திய ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் வேட்டையாடப்பட்ட மானின் உடற்பாகங்களை வனத்துறையினர் கைப்பற்றினர். 

    இது குறித்து வனத்துறையிடம் கேட்ட போது, கள்ள துப்பாக்கி மூலம் மானை வேட்டையாடிய சம்பவத்தில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய உள்ளதால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்பின்னரே எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என தெரிய வரும் என்றனர்.

    கூடலூர் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ள துப்பாக்கி புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×