search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் கார்டு இல்லாமலும் ரே‌ஷன் பொருட்கள் கிடைக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி
    X

    ஸ்மார்ட் கார்டு இல்லாமலும் ரே‌ஷன் பொருட்கள் கிடைக்கும் - அமைச்சர் காமராஜ் பேட்டி

    ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று சொல்ல முடியாது என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் சேப்பாக்கத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த உன்னத திட்டமான ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவு செய்திருக்கிறோம்.

    எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ரூ.330 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். இதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி வைத்தார். இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அதற்கு முன்பே இந்த திட்டத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

    புரட்சித் தலைவி அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் உதாரணமாகும்.

    இதுவரை 1 கோடியே 93 லட்சத்து 58 ஆயிரத்து 47 குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு விட்டன. இன்னும் ஆங்காங்கே ஒருசில குடும்ப அட்டைகள் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தால், உடனடியாக அவர்கள் முகவரி, புகைப்படம், இவைகளோடு வந்தால் உடனே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

    ஸ்மார்ட் கார்டுகள் ஆக்டிவேட் ஆக மார்ச் மாதம் வரை அவகாசம் கொடுத்திருக்கிறோம். மார்ச் 31 வரை அனைத்துமே புழக்கத்தில் வந்துவிடும். புழக்கத்தில் இப்போது இருக்கிற ஒருசில கார்டுகளும், புழக்கத்திற்கு வராத கார்டுகளும், ‘ஆக்டிவேட்’ ஆகாத கார்டுகளும் மார்ச் 31-க்குள் முழுமையாக ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.



    புதிதாக திருமணம் ஆனவர்கள், இடம் மாறுபவர்கள் தனி குடும்ப அட்டை தேவை என்று வருவார்கள். இந்த வகையில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் குடும்ப அட்டை தேவைப்படுபவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். எனவே ஸ்மார்ட் கார்டு எண்ணிக்கை கூடும், குறையும்.

    கேள்வி:- மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு ஸ்மார்ட் அட்டை இருந்தால்தான் பொருட்கள் வழங்கப்படுமா?

    பதில்:- ஸ்மார்ட் அட்டைகளுக்குதான் பொருட்கள் வழங்கப்படும். மார்ச் 1-ந் தேதியில் இருந்து ஸ்மார்ட் கார்டு இருந்தால்தான் பொருட்கள் வழங்கப்படும் என்ற நிலை தற்போது உள்ளது. அதிலே என்னென்ன காரணங்களால் நாங்கள் புகைப்படம் கொடுக்கவில்லை. அல்லது ஆதார் முகவரி கொடுக்க தாமதமாகி விட்டது என்று சொன்னால் அந்த கார்டுகளுக்கும் பொருள் இல்லை என்று சொல்ல முடியாது. நிச்சயமாக, உறுதியாக அனைவருக்கும் ரேசன் பொருட்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழங் கப்படும்.

    ஸ்மார்ட் கார்டு திட்டம் என்பது உன்னதமான திட்டமாகும். இதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்து ஒத்துழைக்க வேண்டும்.

    இதில் யார்- யாருக்கெல்லாம் ஸ்மார்ட் கார்டு தேவையோ, யார்- யாரெல்லாம் உரியவர்களோ, அவர்கள் அனைவருக்கும் உரிய பொருட்களை, உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த 6 ஆண்டில் 1037 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×