search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. சார்பில் 23-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: அ.தி.மு.க - பா.ஜனதாவுக்கு அழைப்பு
    X

    தி.மு.க. சார்பில் 23-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: அ.தி.மு.க - பா.ஜனதாவுக்கு அழைப்பு

    காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. சார்பில் வரும் 23-ம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜக-வுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
    சென்னை:

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு தற்போது 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டுள்ளது.

    14.74 டி.எம்.சி. தண்ணீரை குறைத்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இதையடுத்து காவிரி நதி நீர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி பெற்று தந்த உரிமைகளை அ.தி.மு.க. அரசு பறி கொடுத்து விட்டது. அதனால் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கவும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரையில் எந்த பதிலும் வராத நிலையில் தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிப்போம் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். புதிய கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.



    சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று ரூ3 கோடி மதிப்பிலான சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    காவிரி நதி நீர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம். காவிரி நீர் குறைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது போன்றவை குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டிய அரசு மவுனமாக உள்ளது.

    அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று கூறியும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. அதனால் தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதில் கட்சி வேறுபாடின்றி எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்படும். எங்களை பொறுத்தவரை எதிர் அணியில் உள்ள அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவையும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்போம்.

    அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    Next Story
    ×