search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    நெடுவாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் ஏப்ரல் 12-ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடைபெறும் என நெடுவாசல் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். #Neduvasal #HydroCarbon
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் உள்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதை கண்டித்து நெடுவாசலில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதையடுத்து போராட்ட களத்திற்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், அங்கிருந்த பொதுமக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதி கூறியதோடு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ் குழாய் கிணறுகளை 9 மாதத்திற்குள் அகற்றி, நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என்றும் தெரிவித்தார்.

    ஆனால் ஆழ்குழாய் கிணறுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் நேற்று நெடுவாசலில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதற்கு ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு குழு தலைவர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ., மெய்ய நாதன் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


    ஆர்ப்பாட்டத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வற்புறுத்திய பின்னரும், கடந்த 5-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதியை பெற்ற பின்பே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை தொடங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    எனவே தமிழக அரசு நெடுவாசலில் வணிக ரீதியான உற்பத்திக்கு சுரங்க குத்தகை உரிமத்தை வழங்கக்கூடாது. ஏற்கனவே கலெக்டர் கூறியதை போன்று ஆழ்குழாய் கிணறுகளை அகற்றிவிட்டு நிலத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தினர் நில உரிமையாளர்களிடம் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் வருகிற ஏப்ரல் 12-ந்தேதி முதல் பல்வேறு கிராம மக்களை ஒன்று திரட்டி மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #Tamilnews
    Next Story
    ×