search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் குழந்தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்கும் முகாம் 6 நாட்கள் நடக்கிறது
    X

    சென்னையில் குழந்தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்கும் முகாம் 6 நாட்கள் நடக்கிறது

    சென்னையில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்கும் முகாம் வருகிற 19-ந்தேதி முதல் 6 நாட்கள் நடத்தப்படுகிறது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது. வைட்டமின்-ஏ திரவம் வழங்குவதன் மூலம் பார்வையின்மை தடுக்கப்படுகிறது.

    குழந்தைகளின் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்து 4 மாதங்களில் குறைய ஆரம்பித்து 6 மாதங்களில் மிகவும் குறைந்து விடுகிறது.

    எனவே வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்து 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வருடத்துக்கு இரண்டு முறை கொடுப்பது அவசியமாகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அனைத்து சென்னை ஆரம்ப சுகாதார மையங்களிலும், சென்னை மகப்பேறு மருத்துவமனைகளிலும் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட மையங்களிலும் வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை 6 நாட்களுக்கு 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவ மருந்தை வாய்வழியாக கொடுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 5,89,424 குழந்தைகள் பயன் அடைவார்கள்.

    பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள் அல்லது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையங்களில் தங்களின் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவ மருந்தை வாய்வழியாக கொடுத்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×