search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடிக்கு தொடர்புடைய சென்னை நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை
    X

    நிரவ் மோடிக்கு தொடர்புடைய சென்னை நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடிக்கு தொடர்புடைய சென்னை நகைக்கடைகளில் அமலாக்கத்துறை இன்று அதிரடியாக சோதனை நடத்தியது. #NiravModi #PNBScam #PNBFraudCase
    சென்னை:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.280 கோடி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக சி.பி.ஐ.யால் தேடப்படும் நகைக்கடை அதிபர் நிரவ் மோடி(46), வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.

    கடந்த ஆண்டு நடந்த ரூ.280 கோடி மோசடி தொடர்பாக கடந்த மாதம் 31-ம் தேதி சி.பி.ஐ. முதலில் வழக்குப்பதிவு செய்திருந்தது. ஆனால் அடுத்த 15 நாட்களுக்குள் அதாவது கடந்த 13-ம் தேதி மேலும் ரூ.11,400 கோடி அளவு மோசடி நடந்திருப்பதை கண்டுபிடித்திருப்பதாக நிரவ் மோடி மீது வங்கி நிர்வாகம் 2 புகார்களை அளித்தது.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளியும், கீதாஞ்சலி நகைக்கடை குழும அதிகாரியுமான மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில்,  நிரவ் மோடிக்குச் சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 5,100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை பறிமுதல் செய்தனர். 

    நிரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டியை (தற்போது ஓய்வுபெற்றுள்ளார்) மற்றும் வங்கி அதிகாரி மனோஜ் காரத், நிரவ் மோடி குழும நிறுவனங்களுக்கு கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிகாரி ஹேமந்த் பட் ஆகியோரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் வங்கியில் மோசடி செய்த விவகாரத்தில், நிரவ் மோடிக்கு தொடர்புடைய சென்னையில் உள்ள மூன்று  நகைக்கடைகளில் அமலாக்கத்துறை இன்று அதிரடியாக சோதனை நடத்தியது.

    சென்னையில் நிரவ் மோடிக்கு தொடர்புள்ள பிரபலமான நகைக்கடைகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நிரவ் மோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தொடர்ந்து பறிமுதல் செய்து வரும் நிலையில் சென்னை நகைக்கடைகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. #NiravModi #PNBScam #PNBFraudCase #tamilnews
    Next Story
    ×