search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி அண்ணாசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.
    X
    மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி அண்ணாசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

    மின் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது - 3 ஆயிரம் மின்கட்டண வசூல் மையங்கள் முடங்கின

    ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மின்சார வாரிய ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு), பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் (பி.எம்.எஸ்), தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் (என்.எல்.ஓ.), தமிழ்நாடு பவர் என்ஜினீயர்ஸ் அமைப்பு (டி.என்.பி.இ.ஓ) உள்பட 10 தொழிற்சங்கங்கள் 2 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமைக்கும்படி வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. ஊதிய உயர்வு மாற்று காரணி 2.57 தருவதாக வாரியம் ஒப்புக் கொண்டாலும் அதனை எழுத்து பூர்வமாக செயல்படுத்துவதில் தாமதம் செய்து வந்ததால் அவற்றை உடனே செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    ஆனால் அரசு தரப்பில் ஊதிய உயர்வை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டது. இது தொடர்பான பேச்சு வார்த்தையை ஒத்தி வைத்ததால் திட்டமிட்டபடி இன்று மின்வாரிய தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 80 ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட தொழிற்சங்கங்கள் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதனால் மின்சார வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் மேலும் மின்தடை, பழுது ஏற்பட்டால் அவற்றை உடனே சரிபார்க்க அனைத்து முன்ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக மின் வினியோகம் பாதிக்காது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் மின்கட்டண வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3000 மின் கட்டண வசூல் மையங்கள் செயல்படுகின்றன. இவை பொது மக்களிடம் இருந்து மின் கட்டணத்தை காலை 9 மணி முதல் 2.30 மணி வரை வசூலிப்பார்கள்.

    இன்றைய வேலை நிறுத்தத்தால் இந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது. பண வசூலிப்பாளர்கள் பணிக்கு வராததால் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் பணிகள் மூடங்கின.

    இதுதவிர மின்கம்பங்களில் ‘பியூஸ்’ போகுதல், திடீர் பழுது போன்றவற்றை சரிபார்க்க ஊழியர்கள் இல்லாமல் திணறினார்கள். மின்சார வினியோகத்தில் பாதிப்பு இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் மின் தடைகள், பழுது போன்ற வற்றை உடனே சரி பார்க்க ஊழியர்கள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பொது மக்களுக்கு மின் வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கிடைக்க முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு பணிகளில் அதிகாரிகள் அதிகளவு ஈடுபடுத்தப்படுகிறார்கள். இளநிலை உதவியாளர்கள் மூலம் மின்தடை ஏற்படுகின்ற பகுதிகளில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் பயப்பட தேவையில்லை. மின் பழுது குறித்து உடனே தகவல் தெரிவித்தால் அதனை சரி செய்து விடுவோம் என்றார்.

    இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் சுப்பிரமணி கூறியதாவது:-

    மின் வினியோகத்தை தடை செய்து பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. திட்டமிட்டப்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கிறது. அடுத்த கட்ட போராட்டம் தொடர்வது குறித்து இன்று மாலை முடிவு செய்வோம். இந்த வேலை நிறுத்தத்தால் மின் வினியோகம் பாதிக்காது. மின் பழுதுகள் ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய ஊழியர்கள் இருக்க மாட்டார்கள்.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண வசூல் மையங்கள் முழுமையாக செயல்படாது. 3 ஆயிரம் மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு போகவில்லை. அந்த பணி பாதிக்கும். இதனால் இன்றைய வசூல் பல லட்சம் பாதிக்கப்படும்.

    2.57 ஊதிய உயர்வு காரணி தருவதாக முதல்-அமைச்சரும், மின்துறை அமைச்சரும், வாரிய தலைவரும் ஒப்பு கொண்டு விட்டனர். ஆனால் நிதித் துறை செயலாளர் ஏற்று கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? அதிகாரிகள் வர்க்கத்திற்கு உள்ளதா? எனவே காலதாமதம் செய்யாமல் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews




    Next Story
    ×