search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். படத்தை திறந்தவர் திருநாவுக்கரசர்: விஜயதரணி பாய்ச்சல்
    X

    சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். படத்தை திறந்தவர் திருநாவுக்கரசர்: விஜயதரணி பாய்ச்சல்

    ஜெ. படத்தை திறப்பதில் விஜயதாரணியின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். படத்தை வைத்தது குறித்து திருநாவுக்கரசருக்கு விஜயதாரணி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
    சென்னை:

    சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்த கருத்து காங்கிரஸ் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரத்தில் அவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கும் நிகழ்ச்சியை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.

    காங்கிரஸ் கட்சி கொறடா விஜயதரணி எம்.எல்.ஏ. மட்டும் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்க வரவேற்பு தெரிவித்தார். ஆனால் படம் திறப்பு நிகழ்ச்சியை காங்கிரஸ் புறக்கணித்ததால் விஜயதரணி கலந்து கொள்ளவில்லை.

    அதன்பிறகு விஜயதரணி அளித்த பேட்டியில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ராகுல்காந்தி பார்த்தார், இறுதிச்சடங்கில் கடைசிவரை கலந்து கொண்டார். அப்போதெல்லாம் அவர் குற்றவாளி என்பது தெரிவில்லையா? என கருத்து தெரிவித்து இருந்தார்.

    ராகுல்காந்தி பற்றிய விஜயதரணியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இந்த நிகழ்வுகள் நடந்த போதெல்லாம் தீர்ப்பு வரவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்புதான் தீர்ப்பு வந்தது. அகில இந்திய தலைவரான ராகுல்காந்தியை எம்.எல்.ஏ.வாக இருக்கும் விஜயதரணி எப்படி கேள்வி எழுப்பலாம் என்றார்.



    மேலும் விஜயதரணியின் பேட்டி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் ஆகியோருக்கு திருநாவுக்கரசர் கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே திருநாவுக்கரசருக்கு விஜயதரணி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ராகுல்காந்தி பற்றி கேள்வி எழுப்பவில்லை. ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாக ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரித்தார் என்றும் இறுதிச்சடங்கில் பங்கேற்றார் என்றும் ராகுல்காந்தியின் பண்பைப் பாராட்டித்தான் பேசினேன்.

    இந்திரா, ராஜீவ் படங்களை ஜெயலலிதா தனது வீட்டில் எப்போதும் வைத்திருந்தார். அவர் கட்சி அலுவலகத்தில் வைக்கவில்லை. பிரதமர் மோடி ஜெயலலிதா வீட்டுக்கு வந்தபோது கூட அந்த படங்களை எடுக்கவில்லை.

    நான் வரம்பு மீறியதாக திருநாவுக்கரசர் கூறுகிறார். எந்த வகையில் வரம்பு மீறினேன் என்று தெரியவில்லை. நான் என்ன சத்தியமூர்த்தி பவனிலா ஜெயலலிதா படத்தை திறக்கச் சொன்னேன்?

    இவர் எம்.ஜி.ஆர். படத்தை சத்தியமூர்த்தி பவனில் திறந்தார். வரம்பு மீறியவர் அவரா? நானா? இவரது வீட்டில் வாஜ்பாய், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் படத்தை வைத்திருக்கிறார். அவர் கடந்து வந்த பாதையை மறக்காமல் மரியாதைக்காக வைத்திருக்கிறார். சொந்த விருப்பம் வேறு, கட்சி செயல்பாடு வேறு.

    எனவே கடந்த காலத்தையும் பார்க்க வேண்டும். திருநாவுக்கரசர் கடந்த காலத்தை மறக்காமல் அவர் மதிக்கும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். இதனால் காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் சரியாக செயல்படவில்லை என்று கூற முடியுமா?

    ஜெயலலிதா பட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி என்னிடம் விளக்கம் கேட்பார். நான் அளிக்கும் விளக்கத்தை நிச்சயம் அவர் ஏற்றுக் கொள்வார்.

    இவ்வாறு விஜயதரணி கூறினார். #tamilnews
    Next Story
    ×