search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து துறையில் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்த கூடாது- தங்கபாலு பேச்சு
    X

    போக்குவரத்து துறையில் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்த கூடாது- தங்கபாலு பேச்சு

    போக்குவரத்து துறையில் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்த கூடாது என்று சேலம் பொதுக்கூட்டத்தில் தங்கபாலு பேசியுள்ளார்.

    சேலம்:

    தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெற கேட்டு சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பேசியதாவது:- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் ருபாய் டெப்பாசிட் செய்வோம் என்று ஆசை வார்த்தை கூறி ஆட்சியை பிடித்தவர் மோடி.

    பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சி சின்னா பின்னமாக்கப்பட்டு பின்னோக்கி செல்கிறது. அருண் ஜெட்லியின் கடைசி பட்ஜெட்டால் யாருக்கும் பலனில்லை. மக்கள் விரோத திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அனைத்து துறைகளிலும் ஊழலில் திழைத்து வரும் தமிழக அரசு தினமும் 2 கோடி ஏழை மக்கள் பயன்படுத்தும் பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. சேவை துறையான போக்குவரத்து துறைக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசே வழங்கி நஷ்டத்தை சரி கட்ட வேண்டும். அதனை ஏழை எளிய மக்கள் தலையில் சுமத்த கூடாது. தற்போது உள்ள மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஏழை மக்களை வஞ்சித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பயனடைய மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தலைமை கழக பேச்சாளர் குழந்தை தமிழரசன், தி.மு.க. நிர்வாகிகள் சுபாசு, சூடாமணி, கலையமுதன், தாமரைக்கண்ணன், அண்ணாமலை, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சி, முஸ்லீம் லீக் உள்பட பல்வேறு கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். #tamilnews

    Next Story
    ×