search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நர்சு தற்கொலை: 2 டாக்டர்கள் பணி இடமாற்றம்
    X

    நர்சு தற்கொலை: 2 டாக்டர்கள் பணி இடமாற்றம்

    வெள்ளகோவில் நர்சு தற்கொலை தொடர்பாக 2 டாக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
    வெள்ளகோவில்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கரிமேடு அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் மணிமாலா (25).

    இவர் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் உள்ள செவிலியர் அறையில் மணிமாலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ள கோவில் போலீசார் விரைந்து சென்று மணிமாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிமாலா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் மணிமாலா தந்தை ராமலிங்கம் காங்கயம் வந்தார். மணிமாலா தற்கொலைக்கு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் தமயந்தி, உதவி டாக்டர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோர் டார்ச்சரே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

    மணிமாலா தற்கொலைக்கு காரணமாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பிணத்தை வாங்க மாட்டேன் என ராமலிங்கம் தெரிவித்தார்.

    இதற்கு காரணமாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கயம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செவிலியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், மாதர் சங்கம், மருத்துவ பணியாளர் சங்கம்,சாலை பணியாளர் சங்கம், ஊரக வளர்ச்சி சங்கத்தினர் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த செவிலியர்களும் பங்கேற்றனர். நேற்று நள்ளிரவு 1 மணி வரை போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரத்துறை இணை இயக்குனர் வடிவேல், திருப்பூர் துணை இயக்குனர் ஜெயந்தி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா,தாராபுரம் ஆர்.டி.ஓ.(பொறுப்பு) லியாகத் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது மணிமாலா குடும்பத்துக்கு தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை, நிதி உதவி வழங்க அரசுக்கு பரிந்துரைப்பது. புகார் கூறப்பட்ட டாக்டர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரை வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் நள்ளிரவு ஒரு மணிக்கு வாபஸ் பெறப்பட்டது. பின்னர் மணிமாலா உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

    போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து காங்கயத்தில் கடந்த 3 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு அடங்கியது. #tamilnews
    Next Story
    ×