search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு: நீதிபதி பத்மநாபன் தலைமையில் 9-ந்தேதி பேச்சுவார்த்தை
    X

    பஸ் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு: நீதிபதி பத்மநாபன் தலைமையில் 9-ந்தேதி பேச்சுவார்த்தை

    பஸ் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முதல்கட்டமாக வருகிற 9-ந்தேதி போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். TransportWorkers
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. 12-வது ஊதிய ஒப்பந்தத்தின் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. அதனை தொடர்ந்து 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

    புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிகாரிகள் தலைமையிலும் அமைச்சர் தலைமையிலும், நடந்த பேச்சுவார்த்தையில் 2.44 மடங்கு ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு செய்தது. ஆனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    போக்குவரத்து கழகத்தில் உள்ள தற்போதைய நிலைமை அறிந்து இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்று கொள்ளும்படி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் அதனை தொழிற்சங்கங்கள் ஏற்று கொள்ளாமல், திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 4-ந்தேதி போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று கொள்ளாமல் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    ஒரு வாரமாக நீடித்த இந்த பிரச்சினையில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டு தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டால் தங்களுக்கு இழப்பு அதிகமாக இருப்பதாகவும் அதனை சரி செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் முறையிட்டன. 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கினால் போராட்டத்தை விலக்கி கொள்வோம் என்று கூறினர்.

    இதையடுத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை ஐகோர்ட்டு நியமித்தது. அவர் அதனை விசாரித்து அறிக்கை வழங்குவார் என்று கூறியதை ஏற்று வேலைநிறுத்தம் வாபஸ் ஆனது.

    இந்த நிலையில் நீதிபதி பத்மநாபன் முதல் கட்டமாக வருகிற 9-ந்தேதி விசாரணை நடத்துகிறார். போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாக பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கன்வீனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    13-வது ஊதிய ஒப்பந்தத்தின் மீது விவாதிக்க நீதிபதி இ.பத்மநாபன் தலைமையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலான்மை பயிற்சி நிலைய (மகிழம்பூ) பேரிடம் நிர்வாக கூட்டரங்கில் 9-ந்தேதி மாலை 4 மணிக்கு முதல் கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாக பிரதிநிதிகள் தவறாது கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TransportWorkers
    Next Story
    ×