search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே காளைவிடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் பலி
    X

    திருப்பத்தூர் அருகே காளைவிடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் பலி

    திருப்பத்தூர் அருகே காளைவிடும் விழாவில் மாடு முட்டியதில் வாலிபர் சிகிச்சைக்கு பின்னர் இன்றுகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் காளைவிடும் விழா நடந்தது. இதில் திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு, மிட்டூர், வாணியம்பாடி, பர்கூர், ஊத்தங்கரை, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளை விடும்விழாவை திருப்பத்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின. காளைகள் முட்டியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் கவுதம்பேட்டையை சேர்ந்த முத்துக்குமரன் மகன் சங்கர் (வயது39) துள்ளி வந்த மாடுகளை முதுகில் தட்டி கொடுக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

    அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் ஆம்பூர் அருகே உள்ள வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா நடந்தது. விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர், ஆலங்காயம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபின் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்ற இளைஞர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அப்போது சில காளைகள் சீறிப்பாய்ந்து பலரை முட்டி தள்ளியது. இதில் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தில் நிம்மியம்பட்டு, பெரிய ஏரியூர், செஞ்சி, கம்மவான்பேட்டையிலும் நேற்று மாடுவிடும் விழா நடந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் நடந்த மாடு விழாவில் காளைகள் முட்டி 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் 23 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×